நேற்று நடைப்பெற்ற பஞ்சாப் vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தில் இரண்டு நண்பர்கள் தங்களின் நட்பை கட்டி அணைத்து வெளிப்படுத்திய தருணம் கிரிக்கெட் ரசிகர்களை உள்ளத்தை வென்றுள்ளது.
இந்தூரில் நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியில், பஞ்சாப்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிக் கொண்டன. ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை அணி க்ருணால் பாண்டியா - ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தினால் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற முனைப்பில் களம் இறங்கியது. இதுவரை நடந்து முடிந்த 8 போட்டியில் மும்பை அணி 2ல் மட்டும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.
எனவே, மும்பை அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா? சாவா? என்பது போலவே இருந்தது. இந்நிலையில் மும்பை அணி வீரர்கள் சீரான விகிதத்தில் ரன் சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சூர்யக்குமார் யாதவ், அரைசதம் அடித்தார். அதன் பின்பு, கைக்கோர்த்த கேட்டன் ரோகித் சர்மா மற்றும் க்ருணால் பாண்டியா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அப்போது எல்லோரின் கவனமும் மும்பை இந்தியன்ஸ் பக்கம் இருக்க, பஞ்சாப் அணியில் இருந்த யுவராஜ் சிங் திடீரென்று கேப்டன் ரோகித் சர்மாவின் காலரை பிடித்து இழுத்தார். முதலில் நடப்பது புரியாமல் கோபத்தில் திரும்பிய சர்மாவை, யுவராஜ் சிங் கட்டியணைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மகிழ்ச்சி, சண்டை, எல்லாவற்றையும் முரட்டு தனமாகவே வெளிப்படுத்தும் யுவராஜ் சிங் தனது நண்பருக்கு வாழ்த்துக்களை கூட இப்படி தெரிவிப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், வெற்றி, வேறு அணி, இவையெல்லாவற்றையும், தாண்டி இரண்டு நல்ல நண்பர்களின் நட்பு நேற்றைய தினம் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்து விட்டது.