“இந்தி தெரிந்திருக்க வேண்டும்” - கஸ்டமர்கேர் கருத்துக்கு கண்டனம்; தமிழில் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம் என்று #Reject_zomato ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்ற நிலையில் மன்னிப்பு கேட்டுள்ளது அந்த நிறுவனம்.
Zomato asks apologies after received backlash : தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்ற நபர் டெலிவரி தொடர்பான பிரச்சனையால் சொமேட்டோ வாடிக்கையாளர் மையத்தை அணுகியுள்ளார். அப்போது அவருடைய பிரச்சனைக்கு பதில் அளித்த நபர், “இந்தி நாட்டின் தேசிய மொழி. எனவே அனைவரும் கொஞ்சமாவது இந்தி மொழி தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது பொதுவானது என்று பதில் அளித்தார்.
Advertisment
இது தொடர்பாக மேலும் ட்வீட் செய்துள்ள விகாஷ், தன்னை பொய் சொல்லும் நபர் என்று கூறி டேக் செய்த காரணத்திற்காகவும், எந்த அடிப்படை காரணங்களும் இல்லாமல் இந்தி கற்றுக் கொள்ள கூறியதற்காகவும் சோமேட்டோ பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ட்வீட் செய்திருந்தார்.
வாடிக்கையாளர் மையத்தின் இந்த சர்ச்சைக்குரிய கருத்தினால் சொமேட்டோவிற்கு பலரும் காலை முதல் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் #Reject_Zomato என்று ஹேஷ்டேக்குகளையும் ட்ரெண்ட் செய்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில் தற்போது தங்களின் வாடிக்கையாளர் மைய பிரதிநிதியின் கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ள சோமேட்டோ தமிழில் தங்களின் விளக்கத்தையும் கொடுத்துள்ளது.
வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம். சேவை முகவரின் அறிக்கைகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். மேலும் தமிழில் சந்தைப்படுத்தல் முயற்சிகளாஇ உள்ளூர்மயமாக்கியுள்ளோம்.
உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். அதனை நாங்கள் முழுமையாக உணர்ந்துள்ளோம் என்று மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தங்களின் மன்னிப்பு அறிக்கையில் சொமேட்டோ குறிப்பிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil