இரும்புச்சத்து அதிகமா இருக்கிற முருங்கை கீரையை உங்க வீட்ல யாருமே சாப்பிட மாட்டிக்கிறாங்களா? அன்றாட உணவு பழக்கத்துல முருங்கை கீரையை ஒரு பங்காக்குவதற்கு முருங்கை கீரை கடைசல் செய்யலாம். என்னென்ன பொருட்கள் தேவை, எந்த பதம் என செஃப் தீனா கை வண்ணத்தில் முருங்கைகீரை கடைசல் எப்படி எளிதில் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை - ஒரு கட்டு
துவரம் பருப்பு -100 - 120 கிராம்
சின்ன வெங்காயம் -40
தக்காளி -3
காய்ந்த மிளகாய் -8
பூண்டு -15
புளி - தேவையான அளவு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் -தேவையான அளவு
செய்ய வேண்டியவை:
ஒரு மணி நேரம் ஊற வைத்த துவரம் பருப்பை நன்றாக அலசி 10 முதல் 12 பல் பூண்டு, 2 தக்காளி, 10 சின்ன வெங்காயம் மற்றும் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரில் நன்றாக வேக வைக்க வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி சூடான உடனே கடுகு சேர்த்து பொரிந்த உடன் சீரகம் மற்றும் காய்ந்த மிளகாயை உடைத்து சேர்க்க வேண்டும். அதில் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 2 நிமிடம் கழித்து தக்காளியை சேர்த்து அதனுடன் மஞ்சத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கி புளி கரைசல் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள முருங்கைக் கீரையை போட்டு 2 நிமிடம் வதக்கி பருப்புடன் கலந்து தேவையான அளவு உப்பை சேர்த்து ஒரு கொதி விட வேண்டும். கீரையை நன்றாக கடைந்து அதனுடன் நல்லெண்ணையை சேர்த்தால் சுவையான முருங்கைக் கீரை கடைசல் ரெடி.