/indian-express-tamil/media/media_files/2025/03/11/oe4UzJkkRafzYIH7uIAS.jpg)
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்னை மாதவிடாய்தான். முகப்பருவில் தொடங்கி ஒழுங்கற்ற மாதவிடாய், வலிமிகுந்த மாதவிடாய், தைராய்டு, ப்ரீ மென்சுரல் சின்ட்ரோம், கருத்தரித்தலில் பிரச்னை என அவரவர் உடல் அமைப்பு மற்றும் வயதுக்கு ஏற்றவாறு ஒவ்வொருவிதமான பிரச்னைகளை சந்தித்துவருகின்றனர்.
மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வாகும் விதை சுழற்சிமுறை!
பொதுவாக, பெண்களுக்கு மாதந்தோறும் நடைபெறும் மாதவிடாய் சுழற்சி சரியான முறையில் நடைபெற ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெட்டிரோன் என்ற ஹார்மோன்கள் தேவைப்படுகிறது. இந்த இரு ஹர்மோன்களும் சமநிலையில் இருக்கும்போதுதான் மாதவிடாய் சுழற்சி சரிவர நடக்கிறது. இந்த சுழற்சிமுறை 2 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது மாதவிடாய் நடைபெறுவதற்கு முன்பு 1-14 நாள்கள் ஒரு பகுதியாகவும்; மாதவிடாய்க்கு பிறகு 15 முதல் 30 நாள் வரை 2வது பகுதியாகவும் கருதப்படுகிறது.
முதல் பாதி ஃபோலிகுலர் என்றும் 2-ம் பாதி லுடீல் என்றும் சொல்லப்படுகிறது. இந்த ஹார்மோன் சமநிலையில் இல்லாமல் ஏற்றத்தாழ்வாக இருந்தால் அதனை அமினோரியா என்று சொல்கிறோம். அதாவது, ஹார்மோன் சமநிலையின்மையால் ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் வராமல் இருத்தல், முகப்பரு, PCOS, தைராய்டு கோளாறுகள் மற்றும் நாள்பட்ட சோர்வு, மார்பக வலி, வலிமிகுந்த மாதவிடாய் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், ப்ரீ- மென்சுரல் சின்ட்ரோம், கருத்தரித்தலில் பிரச்னைகள் போன்றவையும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க, ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்துக்கொள்ள விதை சுழற்சி முறை உதவுகிறது என்கிறார் மருத்துவர் மைதிலி.
விதை சுழற்சி முறை என்றால் என்ன?
விதை சைக்ளிங் என்பது பூசணி, ஆளி, எள், சூரியகாந்தி ஆகிய நான்கு வகையான விதைகளை இரு பகுதிகளாக பிரித்து அதாவது ஃபோலிகுலர் பகுதியில் 2 வகையான விதைகளும், லுடியில் பகுதியில் 2 வகையான விதைகளையும் தொடர்ந்து சாப்பிட்டு வருவதாகும். இப்படி முறையாக விதைகளை உண்பது ஹார்மோன் நல்லநிலையில் செயல்பட உதவுகிறது. இதைத்தான் விதை சைக்கிளிங் என்று சொல்கிறோம். மாதவிடாய் நின்ற பிறகும் இந்த விதை சுழற்சியைப் பயன்படுத்தலாம்.
விதை சைக்கிளிங் எவ்வாறு பயன்படுத்துவது?
முதல் ஃபோலிக்குலர் கட்டத்தின்போது தினமும் 1-2 தேக்கரண்டி பூசணி மற்றும் ஆளி விதைகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இரண்டாவது லூட்டல் கட்டத்தின்போது, 1-2 தேக்கரண்டி சூரியகாந்தி மற்றும் எள் விதைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆளி விதைகள் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாகக் கருதப்படுகின்றன, இது இயற்கையாகவே ஆரோக்கியமான ஈஸ்ட்ரோஜன் உற்பத்தியை ஆதரிக்கிறது.
இரண்டிலும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. ஒமேகா-3 கருப்பையில் ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, புரோஜெஸ்ட்டிரோன் சுரப்பை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான செல் சவ்வுகளை பராமரிக்க உதவுகிறது. அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை பிணைக்க உதவும் லிக்னான்கள் எனப்படும் ஊட்டச்சத்து கூறுகளையும் கொண்டிருப்பதால் ஆளிவிதைகள் தனித்துவமானது என்கிறார் மருத்துவர் மைதிலி.
எள் விதைகளில் லிக்னான்கள் உள்ளன, இது மாதவிடாய் சுழற்சியின் இரண்டாவது கட்டத்தில் புரோஜெஸ்ட்டிரோன் அதிகரிக்கும்போது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனைத் தடுக்க உதவுகிறது. சூரியகாந்தி விதைகளில் அதிகளவு கனிம செலினியம் இருக்கிறது, இது ஈஸ்ட்ரோஜன் குறைந்து, புரோஜெஸ்ட்டிரோன் உயரும் போது, லுடீல் கட்டத்தில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனைக் குறைக்க உதவுகிறது. இப்படி சாப்பிட்டால், விரைவில் மாதவிடாய் சுழற்சி சீரடையும் என்கிறார் மருத்துவர் மைதிலி.
நன்றி: Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.