இந்திய நாட்டை வளமான பாதையில் கொண்டு செல்ல இந்த பட்ஜெட் 2019 வெறும் டிரெய்லர் தான் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.
2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் பல்வேறு சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவித்தனர்.
- வருமான வரி உச்ச வரம்பு 2.5ல் இருந்து 5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு. இதன் மூலம் 3 கோடி பேர் பயனடைவார்கள்.
- டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வட்டிக்கு வரிப்பிடித்தம் இல்லை.
- வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை 2 வீடுகளுக்கு அளிக்கப்படும்.
- வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு ரூ. 1 லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி கருத்து
இப்படி இன்ப அதிர்ச்சிகளை அள்ளித் தெளித்த பட்ஜெட்டாக மோடி அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்தது. குறிப்பாக வருமான வரி குறித்த சலுகைகளுக்கு நடுத்தர குடும்பத்தினர் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.
பட்ஜெட் கூட்டம் முடிவடைந்த பின்னர், பியூஷ் கோயலுக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். அதன் பின்னர், பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த மோடி, “எங்கள் அரசின் முயற்சியால் எப்போதும் இல்லாத அளவில் நாட்டில் ஏழ்மை குறைந்துள்ளது. பிரதமரின் விவசாயிகள் நிதி (ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய்) திட்டம் வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும். மொத்தத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட், வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நாட்டை வளமான பாதைக்கு கொண்டு செல்லும் டிரெய்லர் மட்டும் தான். மத்தியத்தர மக்கள் முதல் கூலி தொழிலாளர்கள் வரை, விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை இந்த பட்ஜெட்டால் பயனடைவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரிச் சலுகை, விவசாயிகளுக்கு உதவி... இன்ப அதிர்ச்சி தந்த தேர்தல் பட்ஜெட் ஹைலைட்ஸ்
நடுத்தர மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தும் வாக்குகளுக்கான தேர்தல் ஏற்பாடுகளே என்று பலரும் தெரிவித்து வந்தனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், ‘எங்களின் தேர்தல் அறிக்கையை மத்திய அரசு பட்ஜெட்டாக தாக்கல் செய்துவிட்டது’ என கூறியது குறிப்பிடத்தக்கது.