கடும் நிதி நெருக்கடியில் உள்ள ஏர் இந்தியா நிறுவனம், ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்துள்ள அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்கப்படமாட்டாது என அதிரடியாக அறிவித்துள்ளது.
Advertisment
ஏர் இந்தியா நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. இதனால், ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை, சுங்கத்துறை, எல்லை பாதுகாப்பு படை, இந்திய ஆடிட் போர்டு, மத்திய பாதுகாப்பு தணிக்கை அமைப்பு உள்ளிட்ட அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் பணி நிமித்தம் ஏர் இந்தியாவில் பயணிப்பதுண்டு.
ஆனால், அவர்கள் திருப்பி கட்டண பாக்கியை செலுத்துவதில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், ஒவ்வொரு அரசு அமைப்பும் எவ்வளவு பாக்கி வைத்துள்ளது என்பதை ஏர் இந்தியா அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் பின் ரூ.10 லட்சத்திற்கு மேல் பாக்கி வைத்திருக்கும் அரசு அமைப்புகளுக்கு டிக்கெட் வழங்குவதை நிறுத்தவும், கட்டண பாக்கியை திருப்பி செலுத்தினால் மட்டுமே டிக்கெட் வழங்க வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில், விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிகாரிகளுக்கான பயணத்துக்கு ஏர் இந்தியா டிக்கெட் வழங்க மறுப்பது இதுவே முதன்முறையாகும். அரசு அமைப்புகள் இதுவரையில் ரூ.268 கோடி பாக்கி வைத்துள்ளன. இதை வசூலிக்க வேண்டிய கட்டாயத்தில் ஏர் இந்தியா இருக்கிறது.
2018-19 ஆம் ஆண்டில் முதலீட்டுக்குட்பட்ட ஏர் இந்தியாவின் நிகர இழப்பு சுமார் ரூ .8,556 கோடியாக இருந்தது, அதன் தற்போதைய மொத்த கடன் ரூ .60,000 கோடிக்கு மேல் உள்ளது.
ஏர் இந்தியா விற்பனைக்கு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 100 சதவீத பங்கு விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.