Center government recommends new income tax slabs : மத்திய அரசிடம், வருமான வரி வரம்பில் மாற்றம் செய்வதற்கான பரிந்துரையை பணிக் குழு தாக்கல் செய்துள்ளது. அதில், 10 லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு 10 சதவீத வரியும், 20 லட்சம் ரூபாய் வரையான வருமானத்துக்கு 20 சதவீத வரியும் வழங்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 58 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வருமானவரி சட்டத்தை எளிமைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பரிந்துரைகளை வழங்க, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் குழு ஒன்றை அமைத்துள்ளது.
கடந்த 21 மாதங்களாக 90 முறை கூடி ஆலோசனை மேற்கொண்ட இந்தக் குழு, தங்களது 600 பக்க அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த 19-ம் தேதி குழு வழங்கியுள்ளது.
இந்நிலையில், இரண்டரை லட்சம் ரூபாய் வரையான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதே போல் இரண்டரை லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை யிலான வருமானத்திற்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. எனினும், ஒட்டுமொத்த வருமானம், 5 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்போது, நடப்பு நிதியாண்டு முதல் வரி செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தக் குழு அமைத்துள்ள புதிய பரிந்துரையில், 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் இருந்தால், வரி விலக்கு அளிப்பதை தொடரலாம் என்று கூறப்படுகின்றது. தற்போது 20 சதவீதமும் வரி, 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வசூலிக்கப்படுகின்றது. இதனை 10 விழுக்காடாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தற்போது 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான வருமானத்துக்கு 30 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. இதில் புதிய பரிந்துரைப்படி, 10 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை 20 சதவீதமும், 20 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையான வருவாய்க்கு 30 சதவீதமும் வரி வசூலிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 2 கோடி ரூபாய்க்கு மேலான வருமானத்துக்கு 35 சதவீதமும் வரி விதிக்கவும் யோசனை கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : நிர்மலா சீதாராமன் அறிவிப்பு : பொதுத்துறை வங்கிகள் இணைப்பு – முழு விபரம்
இந்நிலையில், புதிய வரி வரம்பை அமல்படுத்துவதால், 20 லட்சம் ரூபாய் வரையான வருமானம் பெறுவோர், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று பணிக் குழு தெரிவிக்கின்றது. பணிக்குழுவின் இந்த பரிந்துரைகளை முழுவதுமாக ஆய்வு செய்து மத்திய அரசு தனது முடிவை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.