நேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை குறைக்க அறிமுகம் செய்யப்பட்ட திட்டமே சவரன் தங்க பத்திரம் (Sovereign Gold Bond) ஆகும். இந்த திட்டம் கீழ் அக்டோபர் 2018 முதல் பிப்ரவரி 2019 வரை தொடர்ந்து 5 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
நேரடி தங்கத்தினை எப்படி கிராம் கணக்கில் வாங்க முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திர திட்டத்திலும் முதலீடுகளைச் செய்ய முடியும். தங்கத்தின் சந்தை விலைக்கு ஏற்றவாறு இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ள பணத்தின் மதிப்பும் லாபம் அளிக்கும்.
சவரன் தங்க பத்திரத்தினை மத்திய அரசின் சார்பில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. சில்லறை முதலீட்டாளர்களால் தங்க பத்திரத்தினை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் பங்குச் சந்தை எக்ஸ்சேஜ்கள் வாயிலாக முதலீடுகளைச் செய்ய முடியும்.
சவரன் தங்க பத்திர திட்டத்தில் குறைந்தது 1 கிராம் முதல் முதலீடு செய்ய முடியும். அதேபோல், ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் 4 கிலோ கிராம் வரை முதலீடு செய்ய முடியும். இதுவே அறக்கட்டளை மற்றும் அது போன்ற அமைப்புகள் என்றால் 20 கிலோ கிராம் வரை சவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்து 8 வருடங்கள் ஆகும் போது திட்டம் முதிர்வடையும். இடையில் வெளியேற வேண்டும் என்றால் 5, 6, 7 ஆண்டுகளில் வட்டித் தொகை செலுத்தப்படும் போது வெளியேறலாம். சந்தையில் விற்கப்படும் சுத்த தங்கத்தினை விட கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைவாக செலுத்தித் தங்க பத்திரத்தினை வாங்கலாம்.
சவரன் தங்க பத்திரத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு அரையாண்டின் போது 2.5 சதவீத வட்டி விகித லாபம் கிடைக்கும். வருமான வரிச் சட்டம் 1961-ன் கீழ் சவரன் பத்திரம் மூலம் கிடைக்கப்படும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும். இதுவே தனிநபர்களுக்கு மூலதன ஆதாயங்கள் வரியில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளன.
தங்கத்தினை வைத்து எப்படி கடன் பெற முடியுமோ அதே போன்று சவரன் தங்க பத்திரத்தினையும் அடைமானம் வைத்து கடன் பெற முடியும். பான் அல்லது ஆதார் கார்டு போன்ற அடையாள முகவரி சான்றுகளை சமர்ப்பித்து முதலீட்டினை தொடங்கலாம்.
இந்த நிலையில், சவரன் தங்க பத்திர திட்டத்தின் 2018-19 சீரிஸ் 5, இன்று (ஜன.14) தொடங்கியுள்ளது. ஜனவரி 18 வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். கிராம் ஒன்றுக்கு 3,214 என்ற கணக்கில் பத்திரத்தின் பண மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அப்ளை செய்பவர்களுக்கும், டிஜிட்டல் மோடில் அப்ளை செய்பவர்களுக்கும் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி செய்யப்படுகிறது. அவர்களுக்கு, கிராம் ஒன்றுக்கு ரூ.3,164 என விலை நிர்ணயிக்கப்படும்.
தனியாக வீடு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு அனுமதிக்கப்படுவர். வங்கிகள், இந்திய பங்கு விற்பனை நிறுவனம், குறிப்பிட்ட அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் வழியாக இந்த பத்திரங்கள் விற்கப்படும்.
மேலும் படிக்க - தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்குவது எப்படி?