எஸ்பிஐ-யின் இந்த மாற்றம் அமலுக்கு வந்தாச்சு - தெரியாதவங்க தெரிஞ்சுகோங்க
எஸ்பிஐ என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வந்தது. ஆனால் இனிமேல் இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது
SBI: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எந்தவித பயமும் இன்றி எத்தனை முறை வேண்டுமானாலும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை செய்துக் கொள்ளலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? இதோ 2020 வருஷம் பிறந்த உடனே எஸ்பிஐ- யில் வந்திருக்கும் மாற்றங்கள் பற்றி ஒரு பார்வை.
Advertisment
பணத்தை ரொக்கமாக பரிமாற்றுவதற்குப் பதிலாக RTGS, NEFT ஆகிய ஆன்லைன் முறைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இது மகிழ்ச்சியான தகவல் தான். எஸ்பிஐ என்.இ.எப்.டி. பரிவர்த்தனைக்கு 1 முதல் 5 ரூபாயும் ஆர்.டி.ஜி.எஸ். பரிவர்த்தனைக்கு 5 முதல் 50 ரூபாயும் வசூலித்து வந்தது. ஆனால் இனிமேல் இந்த கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்பட மாட்டாது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி யோனோ மொபைல் ஆப், இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் வாயிலாக RTGS மற்றும் NEFT முறைகளில் இலவசமாக, எந்தக் கட்டணமும் இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் ஆன்லைன் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் அனுப்பும்போது வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வேண்டும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் எஸ்பிஐ - யில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
அதே போல் எஸ்பிஐ-யில் அமலுக்கு வந்துள்ள மற்றொரு முக்கிய மாற்றம், ஏடிஎம்- மில் பணம் எடுப்பது. அதாவது எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இரவு 8 மணிக்கு மேல், ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால், அவர்களின் செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். வாடிக்கையாளர்கள் மீண்டும் அந்த எண்ணை ஏடிஎம் இயந்திரத்தில் பதிவு செய்தால்தான் பணம் எடுக்க முடியும் .