unbelievable price hike of 2019 : இந்த வருடத்தில் தான் அத்தியாவசிய பொருட்களில் துவங்கி ஆடம்பர பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாகியுள்ளது. ஆளுங்கட்சியினரோ இந்திய பொருளாதாரத்தில் எந்த வீழ்ச்சியும் இல்லை. மாறாக சீராக அதிகரித்து வருகிறது என்கிறார்கள். எதிர்கட்சியினரோ வரலாறு காணாத பொருளாத வீழ்ச்சியில் சிக்கிக் கொண்டு மக்கள் தவிக்கின்றார்கள். ஆனால் ஆளுங்கட்சியினரோ கண் கொண்டு எதையும் காண்பதில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு விலைவாசி உயர்வு என்பது என்ன என்று தெரிந்தாலே ஆச்சரியம் தான். ஆனால் ஒரு மாதத்தில் இவ்வளவு செலவு, இவ்வளவு சேமிப்பு என்று வாழ்ந்து வரும் பட்ஜெட் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும், ஏன் ஒவ்வொரு நாளும் கூட விலை வாசி உயர்வு பெரும் கவலை அளிக்கும் ஒன்றாக இந்த வருடத்தில் இருந்தது.
தங்கம்
இந்த ஆண்டு ஜூலை மாதம் மோடி 2.0-வின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த முறை பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றிய நிர்மலா சீதாராமன் இம்முறை நிதி அமைச்சராக தன்னுடைய பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தங்கத்திற்கான சுங்க வரி அதிகரிக்கப்பட்டது. ஏற்கனவே தங்கத்தை இறக்குமதி செய்ய இந்தியா 10% சுங்கவரி வசூலித்த நிலையில் அதன் வரியை மேலும் 2.5% அதிகரித்தார். அதன் விளைவாக தங்கத்திற்கான சுங்க வரி 12.5%-மாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தங்கம் ஒரு சவரன் விலை ரூ. 30,000-ஐத் தொட்டது குறிப்பிடத்தக்கது. என்னதான் வரதட்சணை வாங்குவது குற்றமாக அறிவிக்கப்பட்டாலும், பெண்களுக்கான சொத்தாக பெற்றோர்கள் இன்றும் சேமித்து வைக்கும் ஒரு விலையுர்ந்த பொருளாக தங்கம் பார்க்கப்படுகிறது. இதன் விலை அதிகரிப்பு என்பது கவலை அளிக்கும் விசயமாக தான் பலருக்கும் இருந்தது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணியவர்களும் தங்களின் முடிவுகளை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.
பெட்ரோல், டீசல்
அதே பட்ஜெட்டில் பெட்ரோல் மற்றும் ஹை-ஸ்பீட் டீசலுக்கான செஸ் வரி லிட்டருக்கு ரூ.1 அதிகரிக்கப்பட்டது. அதே போன்று கலால் வரியும் 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இதற்கு முன்பே பெட்ரோலின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. அத்தியாவசிய பொருட்களில் மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வால் ஷேர் ஆட்டோ, தனியார் பஸ்கள், வாடகைக்கார்கள் பயணத்திற்கான கட்டணமும் கணிசமாக உயரத் துவங்கியது. ஒரு சமயத்தில் பெட்ரோல் விலையை விட டீசலின் விலை அதிகமானது அனைவருக்கும் பெரும் கலக்கத்தினையே உருவாக்கியது.
வெங்காயம்
கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக பெய்யத் துவங்கிய கனமழையின் காரணமாக முதல் சாகுபடிக்கான நீரும் கிடைக்கவில்லை. இரண்டாம் சாகுபடிக்கான அறுவடை நீரில் மூழ்கிய நிலையும் தான் உருவானது. சென்னையிலேயே ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 180 வரை எட்டியது. இந்த பற்றாக்குறையை உணர்ந்த மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்ததோடு, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து டன் கணக்காக வெங்காயம் இறக்குமதி செய்யவும் உத்தரவிட்டது. சென்னை கோயம்பேட்டில் விநியோகஸ்தர்கள் தனியாக வெங்காய இறக்குமதியிலும் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க : எகிப்து வெங்காயம் விலை எப்படி? கோயம்பேடு வந்தது 35 டன் வெங்காயம்!
பால் விலை உயர்வு
கால்நடை வளர்ப்பவர்கள் பக்கம் பார்த்தால் இந்த செய்தி அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தான் இருக்கும். ஆனால் மற்றொரு பக்கம் பார்த்தால் மிகவும் அச்சத்தை ஏற்படுத்திய ஒன்றாகவும் அமைந்தது பால் விலை உயர்வு தான். தமிழக அரசு பசும்பால் மற்றும் எருமைப் பாலின் கொள்முதல் விலையை அதிகரித்தது. முறையே ரூ.4, ரூ. 6 அதிகரித்து ரூ.32 மற்றும் ரூ.41-க்கு கால்நடை வளர்ப்பவர்களிடம் பெறப்பட்டது. நுகர்வோருக்கான விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு ரூ. 6 வரை உயர்த்தப்பட்டது. டோண்ட் மில்க்கின் விலை ரூ. 37-ல் இருந்து 43க்கு உயர்த்தப்பட்டது. டபுள் டோண்ட் மில்க்கின் விலை ரூ. 34-ல் இருந்து ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. ஸ்டேண்டர்டைஸ்ட் மில்க்கின் விலை ரூ. 41ல் இருந்து அதிகரித்து ரூ. 47க்கு விற்பனை செய்யப்பட்டது. ஃபுல் கிரீம் பாலின் விலை ரூ. 44-ல் இருந்து அதிகரித்து ரூ.51க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் படிக்க : ஃபுல் கிரிம் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.51., முழு விலைப் பட்டியல் இங்கே
வாகனங்கள் விலை குறைவு
பொதுவாக இந்தியாவில், தீபாவளி போன்ஸூக்கு பிறகு வரும் கணிசமான தொகையை கொண்டு 2 சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்கள் வாங்குவது வழக்கம். ஆனால் எந்த வருடத்திலும் இல்லாத அளவுக்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் பாதிக்கு பாதி வரை சலுகை விலையில் விற்பனைக்கு வாகனங்களை வைத்தும் பெரிய அளவில் அதை வாங்க ஆட்கள் இல்லாமல் போனார்கள். சில நிறுவனங்களில் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டது. நாட்களில் துவங்கி வாரக்கணக்கில் விடுமுறைகளும் விடப்பட்ட நிகழ்வுகளும் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் அரங்கேறியது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.