தமிழகத்தில் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகலாம் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு 2020-21ஆம் கல்வியாண்டில் 6, 7, 8 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 40 முதல் 50 சதவீத பாட அளவு குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த ஜனவரி 19ம் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கும் பிப்ரவரி- 8ம் தேதி முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியது. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கோவிட்-19 நெறிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படும் என்று மாநில அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியாத்தால் நடத்தப்படும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாயம் இல்லை என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளதாகவும், இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதுவார்" என்றும் தெரிவித்தார்.
100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சமீபத்திய நிலவரப்படி 1128 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1125 பள்ளிகள் இந்தியாவிலும் காத்மாண்டு, மாஸ்கோ, டெக்ரான் போன்ற நாடுகளில் மூன்று பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 1,209,138 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 56,445 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இப்பள்ளிகள் இந்தியாவில் 25 மண்டலமாக பிரிக்கப்பட்டு அமைந்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil