அரசு மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எந்தவித நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படவுள்ள 15 மாதிரி பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்ற மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்தார்.
இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி சென்னையில் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் படிப்பு அறிமுகம்; 12-ம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதும்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி சென்றபோது அங்கு செயல்படும் மாதிரிப் பள்ளிகளை பார்வையிட்டு திரும்பினார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதுபோன்ற மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் சிறப்பாக பயிலும் மாணவ, மாணவியரை தெரிவு செய்து, சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
மேலும் நீட், ஜே.இ.இ போன்ற தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாதிரிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு தங்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். இந்நிலையில், மாதிரிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.
நுழைவுத் தேர்வு தொடர்பாக, மாதிரி பள்ளிகளின் உறுப்பினர் செயலர் சுதன் அறிவித்தார். அதன்படி கடந்த சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணி வரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் 9 ஆம் வகுப்பு படிக்கும் தேர்வு செய்யப்பட்ட தலா 120 மாணவ, மாணவிகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு எந்த நுழைவுத் தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். மேலும், கல்வித்துறை சார்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட உத்தரவு தவறாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை குறித்த தெளிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும், என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil