சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப் படுவதை உறுதி செய்துள்ளோம்; கோவையில் அன்பில் மகேஷ் பேட்டி
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது, சி.இ.ஒ மூலம் கணக்கெடுக்கப்பட்டு விண்ணப்பிக்கச் சொல்கிறோம் – கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது, சி.இ.ஒ மூலம் கணக்கெடுக்கப்பட்டு விண்ணப்பிக்கச் சொல்கிறோம் – கோவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
கோவையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்
ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு சி.பி.எஸ்.இ பள்ளியாக இருந்தாலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதையும் உறுதி செய்கிறோம் என கோவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார்.
Advertisment
கோவை தடாகம் சாலையில் உள்ள அவிலா கான்வென்டில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் விழா பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோயம்புத்தூர் ஈரோடு திருப்பூர் நீலகிரி நாமக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 350 பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.
இதற்கு முன்னர் மேடையில் பேசிய அமைச்சர், உங்கள் பள்ளியை நோக்கி வருகின்ற மாணவர்களை சிறந்த மாணவனாக மாற்றும் பள்ளி நிர்வாகிகளுக்கு ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தனியார் பள்ளிகளும் எங்கள் பள்ளி தான். அனைத்து மாணவர்களின் நலனை கருதி தான் உத்தரவுகள் வழங்கப்படுகிறது. தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதில் வரவேற்புகளும் விமர்சனங்களும் உள்ளது. இவை எல்லாம் நாட்டின் வளர்ச்சி. அரசும் தனியாரும் இணைந்து செயல்பட வேண்டும்.
Advertisment
Advertisements
தனியார் பள்ளிகளில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆசிரியர்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். எந்த பள்ளிக்குச் சென்றாலும் தமிழ் ஆசிரியர் யார் என்று கேட்பது வழக்கம். தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆர்.டி.இ மூலம் தனியார் பள்ளிக்கு பாதிப்புகள் வரக்கூடாது என்பதில் உள்ளோம். அதிக கட்டணம் வசூலிப்பதில் சில பள்ளிகள் தவறாக ஈடுபடுகின்றனர். கொரோனாவால் மக்கள் மட்டுமல்ல பள்ளி நடத்துபவர்களும் பாதிக்கப்பட்டனர். எங்களுக்கு துணையாக நீங்கள் இருங்கள், உங்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். இவ்வாறு பேசினார்.
நிகழ்வுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, திருச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் ஆணை வழங்கினோம். இன்று கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி போன்ற மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு ஆணை வழங்கினோம். தனியார் பள்ளிக்கு அங்கீகார ஆணையை தேடி வந்து வழங்கியுள்ளோம்.
தனியார் பள்ளிகள் தங்களை நாடி வருகின்ற மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றி வருகிறீர்கள். தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருக்கக்கூடாது, அது தவறு. சி.இ.ஒ மூலம் கணக்கீடு செய்யப்பட்டு, ஆய்வு செய்து உடனடியாக அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க செய்ய சொல்கிறோம். கால அவகாசம் வழங்குகிறோம். பள்ளி கட்டிடத்திற்கு விதிமுறைகள் உள்ளது. விதிமுறைக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்குகிறோம்.
தமிழ் கட்டாயம். ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு சி.பி.எஸ்.இ பள்ளியாக இருந்தாலும் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா என்பதை உறுதி செய்கிறோம். தாய் மொழியாம் தமிழ் மொழியை எழுத படிக்க எல்லா வசதியும் தர வேண்டும் என்ற முறையில் செயல்படுகிறோம்.
டெட் தேர்வு மத்திய அரசுடையது. இருந்தாலும் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு சங்கத்தையும் அழைத்து இருபது மணி நேரம் பேசி, என்ன தீர்வு காண வேண்டும் என செயல்பட்டுள்ளோம்.
2021 இல் மாணவர்களின் தகவல் வெளியாவது தொடர்பாக விசாரித்தோம். 2018க்கான மாணவர்களின் தகவல்கள் போகிறது. இனிமேல் தகவல்கள் வெளியாகாதபடி பார்த்துக் கொள்வோம்.
185 ஊராட்சிகள் இருக்கின்ற தொடக்கநிலை பள்ளிகளின் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்காக நபார்டு வங்கி நிதிக்கு காத்திருகிறோம். வந்துவிட்டது என்று சொல்கிறார்கள். எங்கெல்லாம் மரத்துக்கு அடியில் இருந்து மாணவர்கள் படிக்கிறார்களோ, அவைகள் முற்றிலும் மாற்றப்படும். இந்த மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபடும். நபார்டு வங்கியில் இருந்து பணம் வந்தவுடன் உடனடியாக கட்டிடங்கள் கட்டி தரப்படும்.
காலை உணவு திட்டத்தில் சத்துணவு பணியாளர்களை பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, காலை உணவு திட்டம், சமூக நலத்துறை சார்ந்தது. சமூகநலத்துறை அமைச்சர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், தனியார் பள்ளிகளின் இயக்குனர் நாகராஜ் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil