தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி, வேறு தேதிக்கு மாற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெற்றன. இந்த தேர்வின் முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால், நீட் தேர்வுக்குப் பிறகு 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படியுங்கள்: ப்ளஸ் டூ-க்கு பிறகு என்ன படிக்கலாம்? புதுவையில் 5 ஆண்டு படிப்புக்கு குவிந்த விண்ணப்பங்கள்
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ காலண்டரின்படி, நீட் தேர்வு மே 7, 2023 அன்று நடைபெறுகிறது. எனவே, நீட் தேர்வு நடத்தப்படும் வரை 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை ஒத்திவைக்குமாறு பள்ளிக் கல்வித்துறையிடம் ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
மே 5 தேதியில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானால், அது நீட் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். நீட் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக முடிவுகளை அறிவிப்பது மாணவர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, நீட் தேர்வுக்கு தயாராகி வருவதையும் பாதிக்கும் என்று ஆசிரியர்கள் கூறினார்.
இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு 7 ஆம் தேதி நடைபெறுவதால், மாணவர்கள் எந்தப் பாதிப்புக்கும் உள்ளாகாத வகையில் வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil