scorecardresearch

ஆசிரியர் நியமனத் தேர்வு; தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடவடிக்கை? அன்பில் மகேஷ் பேட்டி

அரசாணை 149 இருக்கக் கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான முடிவு எடுத்த உடன், உரிய நேரத்தில் நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்; அமைச்சர் அன்பில் மகேஷ்

Anbil Mahesh
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

ஆசிரியர் நியமனத் தேர்வு குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: திருச்சியில் விழா: ஒரே நேரத்தில் 308 பள்ளிகளுக்கு அனுமதி; ஆணையை வழங்கிய 2 அமைச்சர்கள்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கடந்த ஆண்டும் தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் விழா நடத்தப்பட்டது. அப்போது தொடக்கப் பள்ளி என்பதை தனித்துறையாக மாற்றி அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மன்றத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கான நன்மைகளை பெற்று தருவதில் இந்த அரசு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே மன்றத்தினர் மற்றும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

டெட் (TET) தேர்வுக்கு பின்னர் நியமனத் தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. எப்போது நடத்தப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, கொரோனாவுக்கு பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நியமனத் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கிறது. இந்த தேர்வு தொடர்பான அரசாணை 149 இருக்கக் கூடாது என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கான முடிவு எடுத்த உடன், உரிய நேரத்தில் நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறினார்.

2013 ஆம் ஆண்டு தேர்வு எழுதி வெயிட்டேஜ் மதிப்பெண்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பணி வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, ஆசிரியர்கள் நலன் கருதி பல்வேறு விஷயங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன. அதில் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். தேவை வரும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

சி.ஏ.ஜி அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்பில் மகேஷ், இந்த அறிக்கையை ஒவ்வொரு துறை அமைச்சர்களும் படித்து பார்க்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி படித்து பார்க்கையில் கடந்த ஆட்சியில் 515 பள்ளிகளை தரம் உயர்த்தியுள்ளனர். ஆனால் எந்த விதிகளையும் பின்பற்றாமல் நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டிய தேவையே ஏற்படவில்லை. உயர் நிலைப் பள்ளிகளில் சேரக்கூடிய மாணவர்களின் விகிதம் 11 சதவீதம் குறைந்துள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் விகிதம் 14 சதவீதம் சரிந்துள்ளது. தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் விகிதம் 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்படித்தான் கடந்த கால ஆட்சி அலட்சியமாக நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆசிரியர்கள் அதிக அளவில் பணி ஓய்வு பெற்று வருகின்றனர். புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, தற்போதே 10,143 ஆசிரியர்கள் பி.டி.எம்.எஸ் (ஒப்பந்த) அடிப்படையில் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர். இந்த இடத்தை நிரப்ப டி.ஆர்.பி.,யிடம் கால அட்டவணை அளிக்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படும், என்று கூறினார்.

ஆசிரியர் நியமனத் தேர்வு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கேள்விக்கு, முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Anbil mahesh says tet compitative exam will dates announced soon by trb