பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்யப்படும் என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் (AICTE) அறிவித்துள்ளது. இருப்பினும், அரியர் தேர்வை ரத்து செய்யம் அரசின் முடிவில் எந்த மாற்றமில்லை என்று மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் பெருந்தொற்று காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வு தவிர, பல்கலைக்கழகங்கள், கலை, அறிவியல் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகள், தொழில்நுட்பக் கல்லூரிகளின் அரியர்ஸ் தேர்வுகளை முதல்வர் பழனிசாமி ரத்து செய்தார். மேலும், தேர்வுக் கட்டணம் செலுத்திய அனைத்து அரியர்ஸ் தேர்வுகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
அரசின் இந்த நடவடிக்கைக்கு அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்து அனுப்பிய கடிதத்தை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்தார்.
கடிதத்தில் "எந்தவொரு தேர்வையும் நடத்தாமல் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற மாணவர்கள் தொழில்துறையாலும், உயர்கல்வி சேர்க்கையின் போது பிற பல்கலைக்கழகத்தாலும் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் "என்று அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுதே கூறினார்.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுமாரசாமி ஏஐசிடிஇ-ன் நடவடிக்கையை வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனம் இத்தகைய முடிவை நடைமுறைப்படுத்துவது துருதர்ஷ்டவசமானது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையே, அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்யும் அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், அரியர்ஸ் தேர்வுகளை தள்ளிவைக்க முடியுமே தவிர ரத்து செய்ய முடியாது எனவும் குறிப்பிடப்பட்டது.
AICTE சார்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக வந்த செய்தியை உயர்க்கல்வி அமைச்சர் கே.பி அன்பழகன் மறுத்தார். அரியர்ஸ் மாணவர்கள் தேர்ச்சி என்ற அரசின் அறிவிப்பு செல்லும். அரசின் முடிவில் எவ்வித மாற்றமுமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil