Anna University introduce 2 Engineering subjects relates Tamil culture: தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை பொறியியல் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில், முதன்முறையாக அறிவியல் தமிழ் மற்றும் தமிழர் மரபு ஆகிய இரு தனித்துவப் பாடங்களை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் நடப்பு கல்வியாண்டு முதல் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு புதிய வழிமுறைகளும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் கூடுதலாக கற்றுக் கொள்ளும் வகையில் மைனர் டிகிரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், தொழில் முனைவோராக உருவாக்குதல் போன்றவற்றைக் கொண்டு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: டாப் பொறியியல் கல்லூரிகளில் செகண்டரி கோர்சஸ் நல்லதா? சாய்ஸ் ஃபில்லிங் கவனமா பண்ணுங்க!
அந்தவகையில் பொறியியல் மாணவர்களுக்கு தமிழ்நாட்டின் செழுமையான பாரம்பரியத்தை கொண்டு சேர்க்கும் வகையில், அறிவியல் தமிழ் (தமிழில் அறிவியல் சிந்தனைகள்) மற்றும் தமிழர் மரபு (தமிழர்களின் பாரம்பரியம்) ஆகிய இரு தனித்துவ பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த இரண்டு பாடங்களும், தமிழகத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம், கட்டிடக்கலை அதிசயங்களை உருவாக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய புத்திசாலித்தனமான பொறியியல் நுட்பங்கள் மற்றும் பண்டைய தமிழர்களின் அறிவியல் முன்னேற்றம் பற்றிய நுண்ணறிவை மாணவர்களுக்கு வழங்கும்.
இரண்டு பாடங்களும் அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் அவர்களின் ஸ்ட்ரீம்களைப் பொருட்படுத்தாமல் கட்டாயமாகும். முதல் செமஸ்டரில் அறிவியல் தமிழ் பாடமும், இரண்டாவது செமஸ்டரில் தமிழர் மரபு பாடமும் கற்பிக்கப்படும்.
பாடங்களின் உள்ளடக்கங்களை தயாரிப்பதில் வல்லுநர்கள் மும்முரமாக இருப்பதாகவும், செப்டம்பர் மாதம் முதல் செமஸ்டர் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாக உள்ளடக்கங்கள் வெளியிடப்படும் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொறியியல் மாணவர்களுக்கு கலாச்சார பாரம்பரியத்தை கற்றுத் தருவது முக்கியம், அது அவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை போற்றவும், பாதுகாக்கவும் உதவும். பாடங்களின் உள்ளடக்கங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்கும். மாணவர்கள் தமிழில் பாடத்தைப் படிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதனால் அவர்கள் மொழியில் அறிவைப் பெற முடியும். அதேநேரம் பிற மாநில மற்றும் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்காக ஆங்கிலத்திலும் பாடங்களின் உள்ளடக்கங்கள் வெளியிடப்படும், என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆங்கிலம் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகள் பற்றிய மாணவர்களின் புரிதலை மேம்படுத்த, பல்கலைக்கழகம் முதல் செமஸ்டர் பாடமாக ஆங்கில நடைமுறை ஆய்வகத்தை சேர்த்துள்ளது. இரண்டாவது செமஸ்டரில், மாணவர்கள் ஒரு தகவல் தொடர்பு ஆய்வகத்தில் நடைமுறை வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும், அங்கு அவர்களுக்கு பிற வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படும். மூன்றாவது செமஸ்டரில், தொழில் மேம்பாடு குறித்த பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்து வந்த மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் சரளமாக, பேசவும் எழுதவும் கற்றுத்தரப்பட உள்ளது, என துணைவேந்தர் தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் பொறியியல் பாடத்திட்டத்தை சமீபத்தில் திருத்தியது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் அதிக திறன்களைப் பெறுவதற்கும் வேலைகளைப் பெறுவதற்கும் உதவுவதற்காக, 'மைனர் டிகிரிகளையும்' அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களின் முக்கிய பாடங்களுடன், மாணவர்கள் ஃபின்டெக் மற்றும் பிளாக்செயின் போன்ற பாடங்களில் ஒரு மைனர் டிகிரியையும் படிக்கலாம். மேலும், இன்ஜினியரிங் மாணவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் எழுத தேவையான நிர்வாகம், பொருளாதாரம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விருப்ப பாடங்களும் அறிமுகம் ஆகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil