மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் வினாத் தாள் கசிவு குறித்த போலிச் செய்திகள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
“யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வினாத் தாள் கசிவு அல்லது 2023 தேர்வுகளின் வினாத்தாள்களை வழங்குவதாகக் கூறி சில நேர்மையற்ற நபர்கள் அல்லது ஏஜென்சிகள் தொடர்ந்து வதந்திகளைப் பரப்புவது வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த நபர்கள், குழுக்கள் மற்றும் ஏஜென்சிகள் ஏமாற்றும் நோக்கத்துடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பணத்தைக் கேட்டு அவர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள். இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் பீதியையும் உருவாக்குகின்றன” என்று சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: 37 கல்லூரிகள்… 4016 இடங்கள்… இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் ‘கட் ஆஃப்’ எப்படி இருக்கும்?
சமூக ஊடகங்களில் இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சி.பி.எஸ்.இ எச்சரித்துள்ளது. "ஐ.பி.சி மற்றும் ஐ.டி சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்தி போலி செய்திகளைப் பரப்புவதில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவிற்கு சி.பி.எஸ்.இ தொடர்ந்து அறிவுறுத்துகிறது" என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ வழங்கிய தரவுகளின்படி, இந்த ஆண்டு, சுமார் 38 லட்சம் மாணவர்கள் சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகளை எழுதுகின்றனர். வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது, 10 ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21 ஆம் தேதி முடிவடைகிறது, அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5 ஆம் தேதி முடிவடைகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil