மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திறன் கல்வியை மேம்படுத்த கணினி குறியீட்டு முறை (Coding) மற்றும் செயற்கை நுண்ணறிவை (AI) அறிமுகப்படுத்துகிறது.
மத்திய கல்வி அமைச்சகம் 2020 இல் ஒரு புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தது, அதன் கீழ் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வியில் தொழில்நுட்பக் கல்வி உட்பட பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
இதையும் படியுங்கள்: CBSE Class 12 Results: சி.பி.எஸ்.இ பிளஸ் டூ ரிசல்ட் எப்போது? செக் செய்வது எப்படி?
இந்தியாவின் எதிர்காலத்திற்கும், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் மற்றும் தரவு அறிவியல் போன்றவற்றை உள்ளடக்கிய பல துறைகள் மற்றும் தொழில்களில் இந்தியாவின் தலைமைப் பாத்திரத்திற்கும் கணிதம் மற்றும் கணித சிந்தனை மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கொள்கை கூறுகிறது.
இதனால், புதிர்கள் மற்றும் விளையாட்டுகளின் வழக்கமான பயன்பாடு உட்பட பல்வேறு புதுமையான முறைகள் மூலம் கணித சிந்தனையை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஈடுபாட்டுடனும் செய்ய, பள்ளி படிப்பின் ஆரம்ப கட்டம் முழுவதும் கணிதம் மற்றும் கணக்கீட்டு சிந்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். குறியீட்டு முறைகள் நடுத்தர வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்படும், என்றும் கொள்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், புதிய கல்விக் கொள்கை (NEP) 2020 திறன் கல்வியை மேம்படுத்துவதற்காக செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், குறியீட்டு முறை போன்ற பாடங்கள் பள்ளி மாணவர்களுக்கு கற்பிக்கப்படும். இவற்றுடன், 8ஆம் வகுப்புக்கு தரவு அறிவியலையும், 6ஆம் வகுப்பிற்கு மருந்துகளை வீட்டில் வைத்திருப்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்த பாடங்களையும் சி.பி.எஸ்.இ அறிமுகப்படுத்துகிறது. இவற்றுள் குறியீட்டு முறைக்கான பாடத்திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
சி.பி.எஸ்.இ 33 பாடங்களை பட்டியலிட்டுள்ளது, இதில் செயற்கை நுண்ணறிவு, நிதி கல்வியறிவு, குறியீட்டு முறை, தரவு அறிவியல், ஆக்மென்ட் ரியாலிட்டி, காஷ்மீரி எம்பிராய்டரி, செயற்கைக்கோள்களின் பயன்பாடு, மனிதநேயம் மற்றும் கோவிட்-19 ஆகியவை அடங்கும். இந்த பாடங்களுக்கான கால அளவு 12-15 மணிநேரம் ஆகும். இந்தப் பாடங்களுக்கான நேரத்தின் 70 விழுக்காட்டினை நடைமுறைச் செயல்பாடுகளுக்கும், 30 விழுக்காடு தியரிக்கும் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil