இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் ரத்து செய்ய மகாராஷ்டிரா அரசுக்கு அதிகாரம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது. இறுதி ஆண்டு தேர்வுகளை ரத்து செய்வதற்கான மாநில அரசின் முடிவு இந்தியாவில் உயர்கல்வியின் தரத்தை நேரடியாக பாதிக்கும் என்றும் அது கூறியது.
Advertisment
ஓய்வுபெற்ற பேராசிரியரும் புனேவை சேர்ந்தவருமான தனஞ்சய் ரகுநாத் குல்கர்னி தாக்கல் செய்த பொதுநல வழக்கில், யுஜிசி தனது பதில் மனுவை கல்வி அதிகாரி நிகில் குமார் மூலம் தாக்கல் செய்தது. இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்யும் முடிவு யுஜிசி-ன் ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும், இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மதிப்பீட்டு முறையை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தது. எனவே ஜூன் 19 மகாராஷ்டிர அரசின் தீர்மானத்தை (ஜிஆர்) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.
கடந்த ஜூலை 6ம் தேடி பல்கலைக்கழகம் மானியக் குழு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில்," இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடக்கும். மேலும், இடையில் உள்ள பருவங்கள் / ஆண்டுத் தேர்வுகள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே 29-4-2020 அன்று அறிவிக்கப்பட்டபடி மாற்றம் இல்லாமல் ( 16.07.2020 to 31.07.2020) அப்படியே தொடரும்" என்று தெரிவித்தது.
முன்னதாக , கொரானா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், கல்லூரிகள், விடுதிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளதால் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியா சூழல் தற்போது நிலவுவதாகவும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பேனர்ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil