மாணவர்களின் ஐடியாக்களை ஸ்டார்ட் அப் ஆக மாற்றும் திட்டத்தை சென்னை ஐ.ஐ.டி செயல்படுத்தி வருவதாகவும், மாணவர்கள் மட்டுமல்லாது நல்ல ஐடியா உள்ள யார் வேண்டுமானாலும் ஐ.ஐ.டி.,யை அணுகலாம் என்றும் இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி, ஐ.ஐ.டி சென்னையின் புத்தாக்க மையம் (Centre for Innovation) மூலம் மாணவர்களுக்கு உதிக்கும் யோசனையை ஆராய்ந்து, அதனை ஸ்டார்ட் அப் (Startup) ஆக மாற்ற தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். ஒவ்வொரு வருடமும் 70-75 ஐடியாக்களை எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு ஐடியாவிலும் 15 மாணவர்கள் பங்கேற்கிறார்கள். இதன்மூலம் கிட்டத்தட்ட 800 மாணவர்கள் இந்தச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 75 ஐடியாக்களில் சுமார் 15 ஐடியாக்கள் ஸ்டார்ட் அப் ஆக மாறுகிறது.
இதையும் படியுங்கள்: ‘3டி அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ் துறையில் வெற்றியாளராக மாறலாம்’: ‘நீயா நானா’ கோபிநாத்
சென்ற ஆண்டு தேர்வு செய்யப்பட்ட 15 ஐடியாக்கள் தற்போது ஸ்டார்ட் அப் ஆக செயல்பட்டு வருகின்றன. இந்தியா 2047ஐ இலக்காக நிர்ணயித்து செல்லும் போது, நாடு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வேண்டும். இதற்கு நிறைய புதிய கண்டுபிடிப்புகளும், புதிய தொழில்முனைவோர்களும் தேவை.
மாணவர்கள் முதலாளிகளாக மாற வேண்டும். மாணவர்கள் அவர்களாகவே ஒரு ஐடியா கொண்டு வரும்போது, அதனை மேம்படுத்த நாங்கள் ஆலோசனை வழங்குகிறோம். எனவே மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தால் நாங்கள் தேவையான ஆலோசனைகளை வழங்க தயாராக இருக்கிறோம். இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
மேலும், ஐ.ஐ.டி சார்பில் மற்ற கல்லூரிகளிலும் இதுபோல் மாணவர்களின் ஐடியாக்களை செயல்படுத்தினால், அதற்கும் நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். மாணவர்கள் மட்டும் அல்லாது யார் வேண்டுமானலும் சிறந்த ஐடியாக்களுடன் வந்தால், அதனை மேம்படுத்த நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்.
ஓட்டுனர் இல்லா கார் திட்டம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. ஐ.ஐ.டி வளாகத்தில் விரைவில் அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதேபோல், பறக்கும் கார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செப்டிக் டேங்க் அகற்றும் பணிகளில் ரோபாக்களை பயன்படுத்தும் திட்டத்தை ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
வருங்காலத்தில் எலக்ட்ரானிக்ஸ், மெட்டீரியல்ஸ், மெட்டலர்ஜி படிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எனவே மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை தான் படிக்க வேண்டும் என நினைக்க வேண்டாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil