IIT-Madras offers 4-year degree in BS Programming and Data Science; JEE score not required: “மாணவர்களின் அதிக ஆர்வத்தைக்” கருத்தில் கொண்டு, இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.ஐ.டி சென்னை) பி.எஸ்.சி புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்டத்தில் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் நான்கு ஆண்டு பி.எஸ் (BS) பட்டத்திற்கான கோர்ஸை வழங்குவதாக அறிவித்துள்ளது. BS நிலையின் ஒரு பகுதியாக, மாணவர்கள் 8 மாத பயிற்சி அல்லது நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒரு ப்ராஜெக்ட் செய்யலாம்.
ஐ.ஐ.டி-சென்னையின் படி, இந்த திட்டம், மாணவர்களுக்கு பல்வேறு நிலை விருப்பங்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் மாணவர்கள் சான்றிதழ், டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு பெறலாம். இது கற்பவர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதோடு, இந்தத் திட்டத்தின் மூலம் அவர்கள் எதைச் சாதிக்க விரும்புகிறார்கள் என்பதைத் தேர்வுசெய்ய அவர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இதையும் படியுங்கள்: சிறப்பு மருத்துவ படிப்புகளில் காலியிடங்கள்; நீட் மதிப்பெண் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு முடிவு
தற்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் விண்ணப்பித்து திட்டத்தில் சேரலாம். சேர்க்கை பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு கோர்ஸைத் தொடங்குவார்கள். 12 ஆம் வகுப்பில் எந்த பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம். வயது வரம்பு இல்லை. 10 ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணிதம் படித்த அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதால், எங்கிருந்து வேண்டுமானலும் சேரலாம்.
தற்போது, 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர், அதிகபட்சமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம். இந்தியாவில் உள்ள 111 நகரங்களில் உள்ள 116 தேர்வு மையங்களில் நேரில் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் மற்றும் இலங்கையிலும் தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த டேட்டா சயின்ஸ் திட்டத்தின் செப்டம்பர் 2022 காலத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 19, 2022 ஆகும். ஆர்வமுள்ள மாணவர்கள் https://onlinedegree.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஐ.ஐ.டி சென்னையின் இயக்குநர் பேராசிரியர் வி காமகோடி கூறுகையில், “இந்த நிறுவனம் நன்கு வடிவமைக்கப்பட்ட, சமகால தேவையான பி.எஸ் இன் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது, இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கற்றுக்கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ஐ.ஐ.டி தரமான கல்விக்கான அணுகலை வழங்குகிறது. டேட்டா சயின்ஸ் (தரவு அறிவியல்) வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாகும். திறமையான வளங்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் ஒரு களத்தில் இது மிகவும் வேலைவாய்ப்பு சார்ந்த பாடத்திட்டமாகும்,” என்று கூறினார்.
தரவு அறிவியல் மாணவர்களுக்கு தரவை நிர்வகிக்கவும், நிர்வாக நுண்ணறிவுகளைப் பெறுவதற்கான வடிவங்களைக் காட்சிப்படுத்தவும், நிச்சயமற்ற மாதிரிகளை உருவாக்கவும், பயனுள்ள வணிக முடிவுகளை எடுக்க முன்னறிவிப்புகளை உருவாக்க உதவும் மாதிரிகளை உருவாக்கவும் கற்றுக்கொடுக்கும். விரிவான பயிற்சி மற்றும் அனுபவக் கற்றல் மூலம், மாணவர்கள் தொழில் தரங்களை தெரிந்துக்கொள்ள நன்கு பயிற்சி பெறுவார்கள். ஐ.ஐ.டி சென்னை, இந்த திட்டத்தின் டிப்ளமோ படிப்பை முடித்த மாணவர்களுக்கு இன்டர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.
இந்த புதிய முயற்சியின் பின்னணியில் உள்ள காரணங்களை விளக்கி, ஐ.ஐ.டி சென்னை டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் பிரிவின் பொறுப்பு பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ், “டேட்டா சயின்ஸ் என்பது பலதரப்பட்ட களமாக இருப்பதால், ஐ.ஐ.டி சென்னையின் இந்த பி.எஸ் பட்டப்படிப்பு மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. வணிகவியல் அல்லது கலைப் படிப்புகளை படித்து வரும் மாணவர்களும் ஐ.ஐ.டி சென்னையில் இதில் பட்டம் பெறலாம். கற்பித்தல் ஆன்லைனில் இருப்பதாலும், நேரில் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்படுவதாலும், கல்லூரிகளில் பட்டப்படிப்பில் படித்துக் கொண்டிருக்கும்போதோ அல்லது முழுநேர வேலை செய்யும்போதோ இந்தப் பட்டத்தை தொடரலாம,” என்று கூறினார்.
இந்த முன்மாதிரி திட்டமானது, மாணவர்கள் போட்டி நிறைந்த ஜே.இ.இ நுழைவுத் தேர்வை (JEE) முயற்சிக்காமல் சென்னை ஐ.ஐ.டி-யில் படிப்பதை சாத்தியமாக்குகிறது. JEE பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்க தடையாக இருக்கும் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் உள்ள மாணவர்களுக்கு இது நேரடியாக பலனளிக்கிறது. இத்திட்டம் நிதி தேவைப்படும் மாணவர்களுக்கு 100% வரை உதவித்தொகை வழங்குகிறது.
மேலும், ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ் படிப்பின் பொறுப்பு பேராசிரியர் டாக்டர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறுகையில், “பி.எஸ் திட்டத்தில் சேருவதற்கு ஜே.இ.இ தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை. மற்ற நுழைவுத் தேர்வைப் போலல்லாமல், இந்தத் திட்டத்திற்கான தகுதிச் செயல்முறை மிகவும் எளிமையானது. அதிநவீன கல்வியியல் செயல்முறைக் கொண்ட ஐ.ஐ.டி சென்னை தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களையும் எண்ணிக்கையில் எந்த தடையுமின்றி அனுமதிக்க உதவுகிறது. தாராளமான உதவித்தொகையுடன், ஐ.ஐ.டி சென்னை நாட்டில் மிகவும் சிறந்த மாதிரிகளில் ஒன்றை உருவாக்கியுள்ளது,” என்று கூறினார்.
ஐ.ஐ.டி சென்னை பி.எஸ் திட்டம், தரவு சார்ந்த உலகில் திறமையான மற்றும் வேலை வாய்ப்புள்ள நிபுணர்களை உருவாக்குவதற்கான தளமாக மாறும். ஐ.ஐ.டி சென்னை குழு, இந்த உள்ளடக்கிய மற்றும் மலிவு கல்வி மாதிரியானது ஐ.ஐ.டி.,களின் வரம்பை அதிக அளவில் நீட்டிக்கும் மற்றும் உயர்தரக் கல்விக்கான அணுகலைப் பெற கற்பவர்களின் அவசரத் தேவையை நிவர்த்தி செய்யும் என்று நம்புகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil