JEE Main Exam 2020: நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Advertisment
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நீட் உள்ளிட்ட தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இன்று (மே 5) மதியம் 12 மணிக்கு, மாணவர்கள் தங்களின் கேள்விகள், சந்தேகங்களை அமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் #EducationMinisterGoesLive என்ற ஹேஷ்டேக்குகளை முன்வைத்தனர். அவற்றுக்குப் பதிலளித்த அவர், தேர்வு தொடர்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
Advertisment
Advertisements
அவர் கூறும்போது, ''நீட் தேர்வு ஜூலை 26-ம் தேதியன்று நடைபெறும். ஜேஇஇ முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும்.
பதிவு செய்துள்ள மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் விரைவில் வெளியிடப்படும். அவற்றில் தேர்வு மையங்கள், தேர்வு நடைபெறும் மையங்கள், தேர்வு நடைபெறும் நேரம் ஆகியவை இருக்கும். தேசியத் தேர்வுகள் முகமை இந்த நுழைவுச் சீட்டுகளை வெளியிடும்'' என்று தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் nta.ac.in.என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் நீட் மற்றும் ஜேஇஇ முதன்மைத் தேர்வுகளின் அனுமதிச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பள்ளிப் பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்தும் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதுகுறித்து எதுவும் கூறவில்லை.
கலந்துரையாடலின் போது, உள்கட்டமைப்பு பிரச்சனைகள், புத்தகங்கள் கிடைக்காதது, கட்டண உயர்வு உள்ளிட்ட மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதிலளித்தார். இது, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நடத்திய இரண்டாவது நேரடி கலந்துரையாடல் ஆகும். அவர் இந்த மாத தொடக்கத்தில் பெற்றோருடன் உரையாடல் நடத்தி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”