ஜே.இ.இ எழுதும் தமிழக மாணவர்கள் விண்ணப்பத்தில் இதைச் செய்தால் அதிக மதிப்பெண் கிடைக்க வாய்ப்புள்ளது. அது என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
ஐ.ஐ.டி., என்.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜே.இ.இ தேர்வுகள் நடத்தப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவலை கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில், தமிழகத்தில் மாநில பாடத்தில் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள் ஜே.இ.இ தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது வினாத்தாள் விருப்ப மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்கிறார்கள். அதேநேரம் தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்யும்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்படும். இது சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் உள்ள கேள்வி குழப்பம் ஏற்படுத்தும்போது, தமிழில் படித்தால் எளிதில் புரிந்துக் கொள்ள உதவும்.
ஜே.இ.இ தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெறும் இராஜஸ்தான், குஜராத் மாணவர்கள் தங்கள் தாய்மொழிகளையே விருப்ப மொழியாக தேர்வு செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதிகமானோர் ஆங்கிலத்தை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். ஆனால் தமிழில் தேர்வு செய்யும்போது இரண்டு மொழிகளிலும் கேள்விகள் வழங்கப்படுவதால், கூடுதல் நன்மையாக இருக்கும். உங்களுக்கு புரியாத கேள்விகளுக்கு தமிழில் படித்து புரிந்துக் கொள்வது நன்றாக இருக்கும் என்பதால், தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil