Kalvi TV CEO post qualification and application details here: கல்வி தொலைக்காட்சிக்கு புதிதாக தலைமை செயல் அதிகாரி பதவியை உருவாக்கியுள்ள பள்ளிக் கல்வித்துறை, இப்பதவிக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கற்றல் செயல்முறையை எளிதாக்கும் வகையிலும், மாணவர்கள் வீட்டிலேயும் கற்கும் வகையிலும் கடந்த 2019 ஆம் ஆண்டில் கல்வி தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இது கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்பட முடியாத நேரத்தில் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவியது.
தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் இணையவழியில் செயல்பட்டு வந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கற்றல் குறைபாட்டை போக்கவும், கற்றல் - கற்பித்தல் பணிகளை வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளவும், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுவோருக்கு உதவிடவும் கல்வி தொலைக்காட்சி வழிவகை செய்தது. தினந்தோறும் வகுப்பு வாரியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அப்போதிருந்து இப்போது இந்த வீடியோக்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பால் இந்த சேவை இன்றுவரை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இதனிடையே கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்த நிலையில், அதை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், போட்டித் தேர்வர்களுக்கு ஏற்ற வகையில் மறுகட்டமைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக கல்வித் தொலைக்காட்சிக்கு தலைமைச் செயல் அதிகாரியை (CEO) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் தனியார் தொலைக்காட்சிகளில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை 5 முதல் 8 ஆண்டுகள் நடத்திய முன் அனுபவம் மிக்க நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தகுதிகள்:
தமிழ் புலமை, தொடர்பு திறன், கணினிகளை கையாளும் திறன், நடைமுறைக்கேற்ப அனைவரும் விரும்பும் வகையிலான நிகழ்ச்சிகளை வடிவமைக்கும் திறன், நிர்வாகத்திறன் உள்ள ஊடகவியல் அல்லது பத்திரிகைத்துறையில் பட்டப்படிப்பு முடித்த 5 முதல் 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் மிக்க நபர்கள் CEO பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதையும் படியுங்கள்: TNPSC Jobs; தமிழ்நாடு அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://forms.gle/KPvFRsK5JHwf9gd68 என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்தவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.