டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (AIIMS) தேசிய வெளியேறும் தேர்வை (NExT) நடத்தும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் அறிவித்தது. NExT தேர்வு 2024 இல் வெளியேறும் தொகுதியுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் ஆணையம் முன்பே சுட்டிக்காட்டியது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எய்ம்ஸ் நிறுவனமும் ஒரு காலக்கெடுவை வெளியிட்டு, ஜூலை 28-ம் தேதி மாதிரித் தேர்வுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியது. இருப்பினும், ஜூலை 6-ம் தேதி எய்ம்ஸ் ராய்ப்பூரில் நடந்த ஒரு நிகழ்வின் வைரலான வீடியோவில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் எல் மாண்டவியா NExT தேர்வு 2019 தொகுதிக்கு நடத்தப்படாது என்று கூறியுள்ளது கேட்கிறது.
இதையும் படியுங்கள்: NEET Counselling: எய்ம்ஸ் உள்ளிட்ட தலைசிறந்த கல்லூரிகளின் கட் ஆஃப் இங்கே
சுகாதார அமைச்சரின் இந்த பேச்சும், தேசிய மருத்துவ ஆணையத்தின் மௌனமும் மருத்துவ மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சில மாணவர்கள் போராட்டங்களை ஏற்பாடு செய்தாலும், மற்றவர்கள் சமூக ஊடக தளங்களில் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.
"முக்கிய குழப்பம் மற்றும் பீதியை ஏற்படுத்தியது இந்த தேர்வு செயல்படுத்தப்பட்ட விதம். எம்.பி.பி.எஸ் மாணவர்கள் எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டில் நீட் பி.ஜிக்கு தயாராகத் தொடங்குவதை அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே, NEET PGக்கு பதிலாக NExTக்கு ஆஜராக வேண்டும் என்று திடீரென்று தெரிந்ததும், எப்படித் தயாராவது என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் இப்போது, புதிய அறிக்கையின் மூலம், நாங்கள் NEXT தேர்வுக்கு தயாராவதா அல்லது NEET பி.ஜி தேர்வுக்கு தயாராவதா என்பது எங்களுக்குத் தெரியவில்லை,” என்று கானாச்சூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸின் (கர்நாடகா) இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவரான முகமது முதாசிர் எம் இசட் indianexpress.com இடம் கூறினார்.
இந்தக் கருத்தை ஆமோதித்த எட்டாவா (உ.பி.) சைஃபாவில் உள்ள உத்தரபிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு எம்.பி.பி.எஸ் மாணவரான அப்துல் ஹை, நெக்ஸ்ட் தேர்வுக்கான மதிப்பெண் முறையும் மாணவர்களை கவலையடையச் செய்துள்ளது என்று கூறினார். மேலும், “நீட் பி.ஜி தேர்வுக்கு 10க்கும் மேற்பட்ட பாடங்களை படித்து தயாராக வேண்டும், அதற்குத் தயாராகி வரும்போது, நெக்ஸ்ட் தேர்வால் நாங்கள் கவலையடைந்துள்ளோம். இப்போது புதிதாக அதற்கான ஆயத்தத்தைத் தொடங்க வேண்டும். இதற்கு மேல், NExT தேர்வின் மதிப்பெண் முறையானது நமக்கு எல்லாவற்றையும் கடினமாக்கும். எதிர்மறை மதிப்பெண்கள் அல்லது மதிப்பெண்கள் விநியோகம், கேள்விகளின் வகைகள், புதிய தேர்வுமுறை போன்றவை இந்த தேர்வில் தேர்ச்சி பெற முடியுமா இல்லையா என்பதைப் பற்றி எங்கள் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது,” என்றும் அப்துல் ஹை கூறினார்.
MBBS தேர்வு முறை MCQ அடிப்படையிலானது அல்ல, தற்போது 10 சதவிகித கேள்விகளே கொள்குறி வகையிலானவை, மீதமுள்ள 90 சதவிகிதம் விரிவான விடையளிக்கும் தன்மை வாய்ந்தவை, எனவே PG நுழைவுத் தேர்வு MCQ வகை தேர்வு முறையாக உள்ளதை எங்களால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது என்று அகர்வால் கூறினார்.
"ஆனால் எதிர்மறை மதிப்பெண்களுடன் மருத்துவ உரிமத்திற்காக நடத்தப்படும் தேர்வில் அதே வடிவமைப்பைப் பயன்படுத்துவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. MBBS மாணவர்களுக்கு அகநிலை முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாணவர்களோ அல்லது ஆசிரியர்களோ MCQ முறையைப் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது பயிற்சி பெறவில்லை, திடீரென்று தேர்வு முறையை மாற்றுவது, நுழைவுப் பயிற்சி மையங்கள் வளர மட்டுமே உதவும், மேலும் மாணவர்களின் முக்கிய நோக்கமான கற்றல் மற்றும் மருத்துவத் திறன்களைப் பெறுவதில் இருந்து நுழைவு தேர்வுக்கான கேள்விகளுக்கு தயாராக தூண்டும்,” என்று முன்னாள் தேசிய தலைவர், ஐ.எம்.ஏ., மற்றும் செயல் குழு தலைவர் டாக்டர் வினய் அகர்வால் கூறினார்.
இருப்பினும், இப்போது 2020 தொகுதிக்கு NExT தேர்வு நடத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் ஒரு கூட்டத்தில் கூறியதால், மாணவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்ததற்காக சில நிபுணர்கள் அமைச்சகத்தை பாராட்டுகிறார்கள்.
"தேசிய மருத்துவ ஆணையம் தாங்கள் பதிவு செய்வதற்கு போதுமானதா என்பதை அறிய ஒரு தேர்வை நடத்த வேண்டும், ஆனால் பல்கலைக்கழகமே பட்டத்தை வழங்க வேண்டும். எம்.பி.பி.எஸ் முடித்தவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழகத்திற்கு யு.ஜி.சி அனுமதி வழங்கியுள்ளது. நீங்கள் பட்டம் வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்கப் போவதில்லை என்றால், அது பல்கலைக்கழகங்களுக்கு மிகவும் அநியாயம் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் நம்மிடம் மிகவும் பிரபலமான, கல்வியறிவு மற்றும் அதிக நிபுணர்களைக் கொண்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. எய்ம்ஸ் டெல்லி பல்கலைக்கழகத்தின் பணி விநியோக அமைப்பில் தலையிட எந்த தார்மீக உரிமையும் இல்லை” என்று அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் (FAIMA) தலைவர் ரோகன் கிருஷ்ணன் கூறினார்.
இந்த அறிவிப்பு, மாணவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019 எம்.பி.பி.எஸ் பேட்ச் சுகாதார அமைச்சரின் ‘சாதாரண’ அறிக்கை தங்களை NExT அல்லது NEET பி.ஜிக்கு தயாராவதா என்பது குறித்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறுகின்றனர்.
“நாங்கள் எம்.பி.பி.எஸ் பட்டப்படிப்பு படிக்கும் போதே நீட் பி.ஜி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தோம், எங்களில் சிலர் இன்டர்ன்ஷிப் கூட செய்து வருகிறோம். நாங்கள் NEET PG படிக்க ஆரம்பித்தோம், ஆனால் அதன் பிறகு NEXT க்கு மாற வேண்டியிருந்தது, இப்போது நாங்கள் மீண்டும் NEET PG க்கு மாற வேண்டும், ஒருவேளை? இது இப்போது எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு ‘நரகம்’ போன்று உள்ளது,” என்று மங்களூரு (கர்நாடகா) கானச்சூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸில் எம்.பி.பி.எஸ் பயிற்சி பெற்ற சையத் கலந்தர் கூறினார்.
சில வல்லுநர்களும், குறிப்பாக நீட் முதுகலை விண்ணப்பதாரர்கள் மூன்று ஆண்டுகளாக தேர்வுக்குத் தயாராகி, தற்போது பல்கலைக்கழக இறுதித் தேர்வுகள் அல்லது இன்டர்ன்ஷிப்பில் பிஸியாக இருக்கும்போது, சமீபத்திய அறிவிப்புகள் முன்னும் பின்னுமாக மாணவர்களை குழப்புவதாக கூறுகிறார்கள்.
“NExT தேர்வு தேவையே இல்லை; புதிய தேர்வுகளைக் கொண்டு வந்து மாணவர்களைக் குழப்புவதற்குப் பதிலாக அதிகாரிகள் NEET PG மற்றும் FMGE ஆகியவற்றை இணைத்திருக்கலாம். இந்த தேர்வை அமல்படுத்துவது தவறு என்பது உண்மைதான், ஏனெனில் மாணவர்கள் செய்முறை பாடங்களில் கவனம் செலுத்த வேண்டிய நேரத்தில் இது வருகிறது, ஆனால் இப்போது இந்த புதிய தேர்வுக்கு தயாராவதற்காக மாணவர்கள் தங்கள் பாடங்களை இழக்கின்றனர். இருப்பினும், இந்த தேர்வின் அறிமுகம் தான் மிகவும் கவலைக்குரியது. புதிய விஷயங்களைக் கொண்டுவருவதை விட நீட் முதுகலை தேர்வை மாற்றியமைத்திருக்கலாம். தற்போது, மருத்துவத் தேர்வுகள், கல்லூரிகள் அல்லது படிப்புகள் என இருக்கும் விஷயங்களின் தரத்தை மேம்படுத்துவதை விட, புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகின்றனர்,” என்று ஆர்யபட்டா அறிவுப் பல்கலைக்கழகத்தின் டீன் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் கூறினார்.
இந்தப் புதிய வெளியேறும் தேர்வு மாணவர்களின் கவனத்தைத் திசைதிருப்பும் என்பதை ஒப்புக்கொண்டு, சில வல்லுநர்கள் NExT தேர்வு "சாத்தியமானதல்ல அல்லது விரும்பத்தக்கது அல்ல" என்று நம்புகிறார்கள்.
“இந்தப் பரீட்சை மருத்துவ மாணவர்களின் மருத்துவப் பயிற்சிக்கான நியாயமான உரிமையை மறுத்து, தகுதியான மருத்துவர்களின் சமுதாய சேவையை பறிக்கும். எனவே, மருத்துவ மாணவர்கள் தாங்கள் மேற்கொள்ளும் தேர்வுகள் மூலம் அல்ல, பாடத்திட்டம், செய்முறை மற்றும் பயிற்சியின் மூலம் மருத்துவம் பயிற்சி செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். தேர்வில் முதலிடம் பெறுபவர் சிறந்த மருத்துவராக இருக்க முடியாது. மருத்துவக் கல்வியின் சிறந்த தரத்தையும், சமூகத்துடன் சரியான தொடர்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று டாக்டர் வினய் அகர்வால் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.