scorecardresearch

NEET UG 2023: ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு; தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் முக்கிய அட்வைஸ்

நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த வேண்டும்; தேசிய தேர்வு முகமைக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கடிதம்

neet exam
நீட் தேர்வு

NEET UG 2023: நீட் தேர்வு வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தேசிய தேர்வு முகமைக்கு (NTA) எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 645 மருத்துவம், 318 பல் மருத்துவம், 914 ஆயுஷ் மற்றும் 47 B.V.Sc மற்றும் AH கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான இந்த இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை 13 வெவ்வேறு மொழிகளில் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 7 தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

இதையும் படியுங்கள்: NEET 2023 Cut off: அதிகரிக்கும் நீட் கட் ஆஃப்; நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்தநிலையில், அனைத்திந்திய மாணவர் சங்கத்தின் (AISU) உறுப்பினரான நவ்நீத் சிங் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் நீட் தேர்வை வருடத்திற்கு 2 முறை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

”நீட் தேர்வை வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நடத்துவதால், ஒரே முயற்சியில் சிறப்பாகச் செயல்பட மாணவர்கள் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மத்தியில் அதிக அளவு மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுகிறது, இது அவர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நீட் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள், அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகுவதையும், விரும்பாத ஒரு படிப்பில் சேர்ந்து அதற்கும் தயாராகுவதையும் ஒரே நேரத்தில் செய்ய வேண்டி வருகிறது. அல்லது ஒரு வருடம் காத்திருந்து அடுத்த ஆண்டு தேர்வு எழுத வேண்டியுள்ளது. மேலும் 2 முறை தோல்வியுற்ற பின்னர், ஒரு படிப்பை தேர்ந்தெடுப்பதிலும் சிரமம் உள்ளது. எனவே நீட் தேர்வை வருடத்திற்கு 2 முறை, அதாவது 40 முதல் 50 நாட்கள் இடைவெளியில் நடத்தினால், அவர்கள் சரியான படிப்பை சரியான நேரத்தில் தேர்வு செய்ய உதவும்” என AISU அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இதனையடுத்து நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த பரிந்துரைத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதில், ”ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வு நடத்துவது மாணவர்களுக்கு பெரும் நிவாரணமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் முதல் முயற்சியில் தோல்வியுற்றால் மருத்துவ இடங்களுக்கு முயற்சிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் மாணவர்கள் ஒரு வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படும், மேலும் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தவர்கள் புகழ்பெற்ற மருத்துவ நிறுவனங்களில் சேர்க்கப்படுவார்கள்” என்று NCPCR தலைவர் பிரியங்க் கனூங்கோ சார்பாக தேசிய தேர்வு முகமைக்கு எழுதிய கடிதத்தில் தர்மேந்திர பண்டாரி தெரிவித்துள்ளார்.

தற்போது வரை, ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இல்லை. AISU அனுப்பிய கோரிக்கைக்கு செவிசாய்த்து நாட்டின் கல்வி மற்றும் மருத்துவத்துறையின் நலனுக்காக சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாணவர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Ncpcr writes letter to nta for conducting neet exam twice a year