தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் கவுன்சிலிங்கின் விண்ணப்பச் செயல்முறை நிறைவடைந்துள்ள நிலையில், மொத்தம் 40000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒற்றைச் சாளர கவுன்சிலிங்கின் கீழ் வழங்கப்படும் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளின் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை கடந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 10 என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கால அவகாசம் ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: நீட் தேர்வில் சுமாரான மார்க்: அப்போ இந்த கல்லூரிகளை குறி வையுங்க!
கடைசி தேதி புதன்கிழமையுடன் முடிவடைந்த நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கு மொத்தம் 40,199 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 26,805 பேரும், மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கு 13,394 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு 4,000 விண்ணப்பங்கள் கூடுதலாக வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 36,406 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் வழங்கிய பின்னரே சீட் மேட்ரிக்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என தேர்வுத்துறை செயலாளர் ஆர்.முத்துசெல்வன் தெரிவித்தார். மே 7 அன்று நடைபெற்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வின் (NEET) முடிவுகள் ஜூன் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து 78,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் தவிர்த்து ஆயுஷ் மருத்துவப் படிப்புகள் மற்றும் இளங்கலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil