சௌரப் குமார்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, (NEET) என்பது இந்தியாவில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர்க்கைப் பெறுவதற்கான நுழைவாயில் ஆகும். இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது, மேலும் நீட் தேர்வின் மிக முக்கியமான பிரிவுகளில் உயிரியல் பிரிவு ஒன்றாக இருப்பதால், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற அதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம்.
நீட் தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் பெறுவார்கள், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண் கழிக்கப்படும். உயிரியல் பிரிவு மூன்றில் மிகப் பெரியது, ஏனெனில் உயிரியல் மட்டும் மொத்தம் 100 கேள்விகளைக் கொண்டுள்ளது, அதில் 90 கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க வேண்டும். மறுபுறம், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகள் ஒவ்வொன்றிலும் மொத்தம் 50 கேள்விகள் உள்ளன, ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 45 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற 2 வாய்ப்பு; உக்ரைன், சீனாவில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
மொத்தம் 200 கேள்விகள் இருக்கும், அதில் 180 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும், மொத்த மதிப்பெண்கள் 720. தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம் 20 நிமிடங்கள்.
உயிரியல் பாடத்திட்டமானது வாழும் உலகில் உள்ள பன்முகத்தன்மை, இனப்பெருக்கம், சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல், உயிரியல் மற்றும் மனித நலன், மரபியல் மற்றும் பரிணாமம், உயிரணு அமைப்பு மற்றும் செயல்பாடு, தாவர உடலியல், கட்டமைப்பு அமைப்பு – தாவரங்கள் மற்றும் விலங்குகள், உயிரி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகள், மனித உடலியல் போன்ற தலைப்புகளைக் கொண்டுள்ளது.
NEET UG 2023 தேர்வின் உயிரியல் பிரிவுக்கு எவ்வாறு தயாராகுவது என்பது குறித்த சில குறிப்புகள்:
அதிக மதிப்பெண் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள்:
மாணவர்கள் அதிக எடையுள்ள தலைப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம், ஏனெனில் அவை அதிக மதிப்பெண் பெற உதவும். மனித உடலியல் (45% வெயிட்டேஜ்), மனித இனப்பெருக்கம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் (18% வெயிட்டேஜ்) விலங்குகள் பன்முகத்தன்மை (10% வெயிட்டேஜ்) மற்றும் செல் உயிரியல் மற்றும் செல் பிரிவு (10% வெயிட்டேஜ்) ஆகியவை அதிக மதிப்பெண் கொண்டவை. மாணவர்கள் இத்தகைய தலைப்புகளில் கவனம் செலுத்துவது அவசியம்.
கடந்த ஆண்டு தேர்வுத் தாள்களை பயிற்சி செய்யுங்கள்:
நீட் உயிரியல் பிரிவுக்குத் தயாராவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று கடந்த ஆண்டு தேர்வுத் தாள்களைப் பயிற்சி செய்வது. இதன் மூலம் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் வகை மற்றும் சிரமத்தின் அளவு ஆகியவை உங்களுக்குத் தெரியும். கடந்த ஆண்டு தாள்களைத் தீர்ப்பது உங்கள் பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய உதவும்.
வரைபடங்களில் அதிக கவனம் செலுத்துங்கள்
உயிரியல் என்பது நிறைய வரைபடங்களை உள்ளடக்கிய ஒரு பாடமாகும். நீட் உயிரியல் பிரிவில் நல்ல மதிப்பெண் பெற, இந்த வரைபடங்களில் கவனம் செலுத்துவது அவசியம். வரைபடங்களை வரைந்து அவற்றை சரியாக குறியிடுங்கள். மேலும், ஒவ்வொரு வரைபடம் மற்றும் வரைபடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்.
தினசரி மாதிரி தேர்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள்
NEET இன் உயிரியல் பிரிவுக்குத் தயாராவதற்கு மாதிரித் தேர்வுகளை எழுதி பார்ப்பது மற்றொரு சிறந்த வழியாகும். மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்வு சூழலை உருவகப்படுத்துகிறது மற்றும் உங்கள் தயாரிப்பு நிலையை மதிப்பிட உதவுகிறது. இது NEET தேர்வில் முக்கியமான உங்கள் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது.
திருப்புதல் மிகவும் முக்கியமானது:
NEET தயாரிப்பில் திருப்புதல் ஒரு முக்கிய அம்சமாகும். நீங்கள் ஏற்கனவே படித்த தலைப்புகளை சீரான இடைவெளியில் திரும்பி படிக்கவும். இது நீண்ட காலத்திற்கு தகவலைத் தக்கவைத்துக்கொள்ளவும், தேர்வின் போது உங்கள் நினைவுபடுத்தும் திறனை மேம்படுத்தவும் உதவும்.
NEET 2023 இன் உயிரியல் பிரிவுக்குத் தயாராவதற்கு முறையான அணுகுமுறை, அர்ப்பணிப்பு மற்றும் நிலையான முயற்சிகள் தேவை. கருத்துக்களை தெளிவாக புரிந்து கொண்டு தொடர்ந்து பயிற்சி செய்வது அவசியம். சரியான தயாரிப்பு உத்தியுடன், எந்தவொரு மாணவரும் உயிரியல் பிரிவில் தேர்ச்சி பெறலாம் மற்றும் நீட் தேர்வில் நல்ல தரவரிசையைப் பெறலாம்.
(கட்டுரையாளர், தலைமை கல்வி அதிகாரி, வித்யாமந்திர் வகுப்புகள்)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil