இந்த ஆண்டு ஐம்பது புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் மேலும் 8,195 எம்.பி.பி.எஸ் (MBBS) இடங்களைச் சேர்த்து, நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் மொத்த இடங்களின் எண்ணிக்கை 1,07,658 ஐத் தாண்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
இந்த 50 கல்லூரிகள் (30 அரசு மற்றும் 20 தனியார்) சேர்ந்துள்ளதால், தற்போது நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 702 ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்: NEET UG 2023: நீட் தேர்வு ரிசல்ட் எப்போது? கட் ஆஃப் எப்படி இருக்கும்?
தெலுங்கானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஒடிசா, நாகாலாந்து, மகாராஷ்டிரா, அசாம், கர்நாடகா, குஜராத், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 50 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் ஆய்வுகளின் போது, பரிந்துரைக்கப்பட்ட தரங்களைப் பின்பற்றவில்லை எனக் கூறி நாடு முழுவதும் உள்ள 38 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் கடந்த இரண்டரை மாதங்களில் திரும்பப் பெறப்பட்டது என வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், 102 மருத்துவக் கல்லூரிகளுக்கு குறைபாடுகளைச் சரிசெய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
38 மருத்துவக் கல்லூரிகளில், 24 மருத்துவக் கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்திடம் முறையீடு செய்துள்ளன, மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் இப்போது சுகாதார அமைச்சரை அணுகியுள்ளன. அங்கீகாரம் இழந்த கல்லூரிகள் ஒரு முறை NMC யிலும், பின்னர் சுகாதார அமைச்சகத்திடமும் குறைபாடுகள் மற்றும் தேவைகளை சரிசெய்த பிறகு மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகின்றன. கல்லூரிகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்கவில்லை என்றும், சிசிடிவி கேமராக்கள், ஆதார் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பட்டியல்கள் தொடர்பான பல குறைபாடுகள் கமிஷனின் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் நடத்திய ஆய்வுகளின் போது கவனிக்கப்பட்டன.
2014 ஆம் ஆண்டு முதல் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 387 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்து தற்போது 654 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பிப்ரவரியில் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
மேலும், 2014 ஆம் ஆண்டுக்கு முன் 51,348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ் இடங்களின் எண்ணிக்கை 94 சதவீதம் அதிகரித்து, தற்போது 99,763 ஆகவும், 2014 ஆம் ஆண்டுக்கு முன் முதுகலை பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 31,185 ஆக இருந்த நிலையில் 107 சதவீதம் அதிகரித்து, தற்போது 64,559 ஆகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், அதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ் இடங்களையும் அரசு உயர்த்தியுள்ளது என்று பாரதி பிரவின் பவார் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.