scorecardresearch

விதிமுறைகள் மீறல்: புதுவை அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து; பெற்றோர்கள்- மாணவர்கள் அதிர்ச்சி

விதிமுறைகளை கடைபிடிக்காததால் புதுவை அரசு மருத்துவ கல்லூரி அங்கீகாரம் ரத்து; பெற்றோர்கள் – மாணவர்கள் அதிர்ச்சி

MBBS
மருத்துவ படிப்புகள்

புதுச்சேரி கதிர்காமத்தில் அரசு மருத்துவக்கல்லூரி 2011 முதல் இயங்கி வருகிறது. இந்த அரசு மருத்துவக் கல்லூரியில் 180 எம்.பி.பி.எஸ் இடங்கள் உள்ளது. இங்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. இங்கு மாணவர்களுக்கு இலவச மருத்துவ கல்வி அளிக்கப்படுகிறது.

இதனால் புதுவை மாணவர்கள் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க மிகுந்த ஆர்வம் காட்டுவர். இந்த கல்லூரியில் இடம் கிடைக்க போட்டாபோட்டி நிலவும். இந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ ஆணையத்தின் (என்.எம்.சி) விதிமுறைகளை கடைபிடிக்கவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகார்களும் மருத்துவ கவுன்சிலுக்கு சென்றது.

இதையும் படியுங்கள்: புதுவை பாரதியார் பல்கலைக்கூட கலைப் படிப்புகள்; விண்ணப்பிக்க ஜூன் 10 கடைசி தேதி

இந்தநிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்திய மருத்துவ ஆணைய அதிகாரிகள் அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையை பார்வையிட்டனர். அப்போது 8 ஆபரேஷன் தியேட்டர்களில் ஒன்று மட்டுமே இயங்கியது. மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இதையடுத்து இந்திய மருத்துவ ஆணையம் புதவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இது புதுவை மாநில பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக புதுவை மாநில அ.தி.மு.க துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய மருத்துவ ஆணையம் அனுமதியுடன்தான் அரசு மருத்துவக்கல்லூரி செயல்படுகிறது. புதுவை மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் இங்கு நாள்தோறும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரியில் 8 ஆபரேஷன் தியேட்டரில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இங்கு பல துறைகளில் டாக்டர்கள் இல்லை. பணிபுரியும் டாக்டர்களும் பணி நேரத்தில் இருப்பதில்லை. தனியார் மருத்துவமனைகளிலும் அவர்கள் பணி செய்கின்றனர்.

மாணவர்களே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். பல்வேறு அடிப்படையான, அத்தியாவசியமான தேவைகளை கூட கல்லூரி நிர்வாகம் பூர்த்தி செய்யவில்லை. இதுகுறித்து இந்திய மருத்துவ ஆணையத்திற்கு பல புகார்கள் சென்றுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து நிர்வாக சீர்கேடுகளை களையும்படி புதுவை அரசுக்கு இந்திய மருத்துவ ஆணையம் 6 மாதம் முன்பே எச்சரித்துள்ளது. ஆனால் அரசு திட்டமிட்டு, தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆதரவாக சதி செய்துள்ளது. இந்த சதியில் அரசு மருத்துவக்கல்லூரி அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளது.

மருத்துவம் படிக்க வேண்டும் என கனவோடு படித்த புதுவை மாநில ஏழை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் துரோகம் இது. கல்லூரியின் அங்கீகாரமே ரத்தானதால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மட்டுமின்றி, ஏற்கனவே மருத்துவம் படித்து வரும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையும் கேள்விக் குறியாகியுள்ளது.

எனவே உடனடியாக இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டும். அவரின் வாக்குறுதியை நம்பியே புதுவை மாநில மக்கள் ரங்கசாமிக்கு வாக்களித்தனர். அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட, மருத்துவ மாணவர்களுக்கு 180 இடங்கள் கிடைக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் கூறியது தவறு என்றால் முதலமைச்சர் என் மீது வழக்கு தொடரட்டும், நீதிமன்றத்தில் ஆதாரத்தை சமர்பிக்க தயார்.

மருத்துவ ஆணையத்திடம் இருந்து ரத்து உத்தரவு புதுவை அரசுக்கு வந்து 3 நாட்கள் ஆகிறது. இதற்கு காரணமான மருத்துவக்கல்லூரி இயக்குனர் உட்பட அதிகாரிகளை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும். வவுச்சர் ஊழியர்களை சட்டத்துக்கு புறம்பாக பணி நிரந்தரம் செய்ய முதலமைச்சர் அக்கறை காட்டினார். ஆனால் டாக்டர்கள் நியமனத்தில் அக்கறை காட்டவில்லை. இதனால்தான் தற்போது அரசு மருத்துவக்கல்லூரி அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறினார்.

அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது புதுவை மாநில மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், புதுவை அரசு மருத்துவக் கல்லூரியின் அனுமதியை திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, புதுவை அரசு மருத்துவக் கல்லூரி இயக்குனர் உதயசங்கர் கூறியுள்ளார். தேசிய மருத்துவ ஆணையம் அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள சில குறைபாடுகளை சுட்டிக் காட்டியுள்ளது. இந்த குறைகளை களைந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீண்டும் அனுமதி பெற ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளோம். இதனால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி கிடைக்கும் என உதயசங்கர் தெரிவித்தார்.

பாபு ராஜேந்திரன், புதுச்சேரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Nmc cancels puducherry government medical college accreditation