முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு செயல்முறையில் தமிழ் வழிச் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய போதிய அவகாசம் வழங்கவில்லை எனக் கூறும் தேர்வர்கள், இதனால் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள முடியவில்லை என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய மறுவாய்ப்பு வழங்கி கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2200க்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர், கண்னி பயிற்றுனர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 04.07.2022 அன்று வெளியிடப்பட்டது. இதனையடுத்து இந்த பணியிடங்களுக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்: இந்தியாவில் 11 சதவீத 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படை கணிதத் திறன் இல்லை – புதிய ஆய்வு
முன்னதாக, தமிழ் வழி இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த சில விண்ணப்பதாரர்கள், அதற்குரிய சான்றிதழ்களை முறையாக பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது. இதற்கான அறிவிப்பு இணையதளத்தில் அறிவிக்கப்பட்டதோடு, சம்பந்தப்பட்ட தேர்வர்களின் மின்னஞ்சல்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
அதோடு, சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய 22.08.2022 முதல் 25.08.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் சில தேர்வர்கள் தங்களுக்கு மின்னஞ்சல்கள் தாமதமாக கிடைக்கப்பெற்றதாகவும், அதனால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர். அதாவது 25 ஆம் தேதிக்குப் பிறகு மின்னஞ்சல்கள் கிடைக்கப்பெற்றதாக சில தேர்வர்கள் கூறுகின்றனர்.
மேலும், சில தேர்வர்கள் இணைய வசதி இல்லாத தொலைபேசியை பயன்படுத்துவதாலும், மின்னஞ்சல்களை சரிவர பார்த்து வராதவர்களாக இருப்பதாலும், அவர்களுக்கு தமிழ் வழி சான்றுகளை மீண்டும் பதிவேற்றம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் தற்செயலாக, அதுவும் தாமதாக பார்த்த விண்ணப்பதாரர்களாலும் இணையதளம் மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை.
இந்தநிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ்களை சரியாக பதிவேற்றிய தேர்வர்களுக்கு மட்டும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
இதனால் ஏமாற்றம் அடைந்துள்ள தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய மறுவாய்ப்பு வழங்கி, கலந்தாய்வில் கலந்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.