புதுச்சேரியில் தொழில் மற்றும் கலை படிப்புகளுக்கு சென்டாக் மாணவர் சேர்க்கை இன்று (மே 17) முதல் தொடங்குவதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது:
இதையும் படியுங்கள்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வுகளுக்கான பயிற்சி; பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அழைப்பு
2023-24 ஆம் கல்வியாண்டிற்கான நீட் அல்லாத இளநிலை தொழில்படிப்புகள், இளநிலை கலை அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது.
நீட் அல்லாத தொழில்முறை படிப்புகளான பி.டெக், பி.எஸ்.சி வேளாண்மை, கால்நடை, நர்சிங், பி.பி.டி, பி.பார்ம், எல்.எல்.பி, டிப்ளமோ, இளநிலை கலை, அறிவியல், வணிக படிப்புகளான பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ, பி.சி.ஏ மற்றும் இளநிலை நுண்கலை படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க ஜூன் 6 தேதி கடைசிநாளாகும். தொழில் படிப்புக்கு பொதுபிரிவினருக்கு 1000 ரூபாயும், கலை, அறிவியல், வணிக படிப்புக்கு 300 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தொழில் படிப்புக்கு 500 ரூபாயும், கலை, அறிவியல் படிப்புக்கு 150 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
நீட் அல்லாத தொழில்நுட்ப படிப்புகளுக்கு 5 ஆயிரத்து 229 இடங்களும், கலை அறிவியல், வணிக படிப்புகளுக்கு 4 ஆயிரத்து 320 இடங்களும், நுண்கலை படிப்புகளுக்கு 90 இடங்களும், லேட்ரல் என்ட்ரிக்கு 292 இடங்களும் உள்ளது. இதுதவிர மருத்துவம், மருத்துவம் சார்ந்த நீட் மாணவர் சேர்க்கைக்கு 917 இடங்கள் உள்ளது. பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
என்.ஆர்.ஐ, என்.ஆர்.ஐ ஸ்பான்சர், வெளிநாட்டு மாணவர்கள் சென்டாக் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள தகுதியின் அடிப்படையில் ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். புதுவை, பிற மாநில விண்ணப்பதாரர்கள் நீட் அல்லாத இளநிலை தொழில்முறை படிப்புகளில் சுயநிதி இடஒதுக்கீடுகளுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். அனைத்து விபரங்களும் சென்டாக் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தரவரிசை பட்டியல், கலந்தாய்வு அடுத்தடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது கல்வித்துறை செயலர் ஜவகர், சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு ஆகியோர் உடனிருந்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil