பள்ளிக்கு நிரந்தரம் கட்டிடம் கட்டித்தர கோரி சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உட்பட 100-கும் மேற்பட்டோர் கம்பன் கலையரங்கம் அருகே இன்று பள்ளித் திறந்த இரண்டாம் நாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள திரு.வி.க அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்க உள்ளதால், மாணவர்களை வேறு பள்ளி கட்டிடத்திற்கு மாற்றப்பட்டதை கண்டித்து, அப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பள்ளி அந்த இடத்திலே செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: புதுச்சேரியில் திரு.வி.க அரசு பள்ளியை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு; மாணவர்கள், எம்.எல்.ஏ ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் இன்று, கந்தப்பா முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பழைய சட்டக் கல்லூரி கட்டிடத்தில் இயங்கி வரும் சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் மாணவர்களை வேறு பள்ளி கட்டிடங்களுக்கு மாற்றப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரமாமுனிவர் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம், நேரு எம்.எல்.ஏ பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதே வேளையில் பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்டி தரக் கோரி, சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கம்பன் கலையரங்கம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
மாணவிகளின் போராட்டத்தை கல்வித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் நமச்சிவாயம், மாணவிகள் மற்றும் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், கல்வித்துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோடை விடுமுறைக்கு பின்பு நேற்று புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன இந்த நிலையில் நேற்று முதல் நாளே திரு.வி.க பள்ளியில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். இன்று இரண்டாவது நாள் இந்தப் போராட்டம் நடக்கிறது. இதனால் மாணவர் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மற்றும் கல்வித்துறை தெளிவான முடிவு எடுக்காததால் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது என பொதுமக்களும் மாணவர்களும் குறை கூறுகின்றனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.