தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு உள்பட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் மொத்தம் 719 நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இட ஒதுக்கீடு வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்று வருகிறது. சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வியாழக்கிழமை கவுன்சிலிங் நடத்தியது.
இதையும் படியுங்கள்: 7.5% இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களும் லட்சங்களை செலவழித்தால் தான் எம்.பி.பி.எஸ் சீட்?
இதில் சிறப்பு பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் 719 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டுக்கு 1398 மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட நிலையில், 622 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 486 எம்.பி.பி.எஸ், 132 பி.டி.எஸ் இடங்கள் அடங்கும். எனவே மொத்தம் உள்ள 622 இடங்களும் நிரம்பி விட்டன.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங்கில், தகுதி பெற்ற 25 பேரில், எட்டு பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட 25 பேரில் 11 பேருக்கு இடங்கள் கிடைத்தன. 80 மாற்றுத்திறனாளிகளில் 78 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பிரிவில் பெறப்பட்ட 2,993 விண்ணப்பங்களில், 901 ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும், 2,092 பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வந்துள்ளன. விளையாட்டுப் பிரிவில் 179 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 114 விண்ணப்பதாரர்கள் தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் பெறப்பட்ட 401 விண்ணப்பங்களில் 328 பேர் தகுதி பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகள் 98 பேரில் 80 பேரின் விண்ணப்பங்கள் தகுதியுடையதாக கண்டறியப்பட்டது, என சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், அமைச்சர் சுப்ரமணியன் 19 சுகாதார அறிவியல் படிப்புகளுக்கான தகுதிப் பட்டியலையும் வெளியிட்டார்.
கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட பல விண்ணப்பதாரர்கள் நீட் ரிப்பீட்டர்கள். நீட் தேர்வில் 569 மதிப்பெண்கள் பெற்ற கிருத்திகா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இவர் நீட் தேர்வை மறுமுறை எழுதியவர். 565 மதிப்பெண்கள் பெற்ற பச்சையப்பன் சரவணனும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியை தேர்வு செய்துள்ளார். இவரும் நீட் தேர்வை மறுமுறை எழுதியவர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரியான அர்ச்சனா ராஜ்குமார், சேலம் மருத்துவக் கல்லூரியைத் தேர்வு செய்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil