கொரோனா பொதுமுடக்க நிலையால், இன்னும் புது கல்வியாண்டு பாடத்திட்டங்கள் தொடங்கப்படாத நிலையில் உள்ளது. நாட்கள் குறைகின்ற போது பாடத்திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பதற்காக தமிழக அரசு சார்பில் பரிந்துரை குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த கல்வி ஆண்டில் I முதல் Xம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களின் உள்ளடக்கத்தை குறைந்தது 30% குறைக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு, ஜே.இ.இ நுழைவுத் தேர்வு போன்ற நுழைவுத் தேர்வு காரணங்களால் XI,XII பாடத் திட்டங்களின் உள்ளக்கடத்தை குறைப்பது தொடர்பாக இன்னும் பரிந்துரை குழு முடிவெடுக்கவில்லை என்றும், என்.சி.இ.ஆர்.டி அறிவிப்புக்காக காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தி குறிப்பில், " ஆசரியர்கள், புத்தக ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயற்சி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய குழு பாடத்திட்டங்களின் உள்ளடக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்களின் கல்வித்திறன் பாதிக்காத வகையில் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும்" என்று தெரிவித்தது.
தமிழ்/ஆங்கிலம் பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதிகள் தக்க வைத்துக் கொள்ளபப்டும். உரைநடை பகுதிகள், கட்டுரைகள் நீக்கப் படலாம் என்று ஆசிரியர் ஒருவரின் கருத்தையும் டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கோள் காட்டியது.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று கட்டுபடுத்தப்பட்டு, மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதை தற்போதைய சூழலில் யாராலும் கணிக்க முடியாது என்பதால், 50% சதவீத பாடத்திட்டங்கள் வரை குறைக்கப்படலாம் என்ற கருத்தும் ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.
முன்னதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் மாநில கல்வி அமைச்சர் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில், டெல்லி துணை முதல்வரும், கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, பாடப்புத்தகத்தில் சில பகுதிகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், நீட், ஜே.இ.இ மெயின் போன்ற நுழைவுத் தேர்வுகளை அடுத்த ஆண்டு ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil