பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1,48,811 இடங்கள் உள்ளன. இதற்கான மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்று மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மூன்று சுற்று முடிவில் 58,307 பொறியியல் இடங்கள் நிரம்பியுள்ளன.
இதையும் படியுங்கள்: மழை விடுமுறை நாட்களை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் – அன்பில் மகேஷ்
தற்போது இறுதிச் சுற்று கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கிய இறுதிச் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க 61,771 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. சாய்ஸ் ஃபில்லிங் செயல்முறை முடிந்து, தற்போது தற்காலிக ஓதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பொறியியல் படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 28 ஆம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2022-23 ஆம் ஆண்டிற்கான பி.இ/ பி.டெக் முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்குவதற்கு ஏதுவாக, நவம்பர் 14 ஆம் தேதி அறிமுக வகுப்புகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2023 மார்ச் மாத இறுதியில் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil