Tamilnadu govt reduce medical internship NOC fee to 90%: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இன்டர்ன்ஷிப் செய்ய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தடையில்லாச் சான்றிதழுக்கு செலுத்தும் கட்டணம் ரூ.3.54 லட்சத்தில் இருந்து ரூ.29,400 ஆக, சுமார் 90% குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள், தமிழகத்தில் பணிபுரிய தேசிய அளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர்களின் CRRI (கட்டாய மருத்துவ இன்டர்ன்ஷிப்) பயிற்சியை கட்டாயம் செய்ய வேண்டும். இதற்காக பட்டதாரிகள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.3.54 லட்சம் செலுத்தி தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டியிருந்தது. இது தவிர அந்தந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டியிருந்தது.
இதையும் படியுங்கள்: கடற்கரை தாது மணல் ஏற்றுமதி இழப்பு; தனியார் நிறுவனங்களிடம் ரூ.5,832 கோடியை வசூலிக்க தமிழக அரசு உத்தரவு
“மாணவர் சங்கம் மற்றும் மருத்துவ மாணவர் குழுக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளின் அடிப்படையில், தடையில்லா சான்றிதழுக்கான கட்டணம் ரூ. 29,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மேலும், இனி, மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு ரூ.29,400ம், அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரூ.2 லட்சமும் செலுத்துவார்கள். கல்லூரிகள் ரூ.1 லட்சத்தை மாநில கருவூலத்தில் டெபாசிட் செய்து, மீதமுள்ள நிதியை மருத்துவமனை வளர்ச்சிக்கு பயன்படுத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழகம் அல்லது இந்தியாவில் மருத்துவ கல்வியை பெற முடியாத, மருத்துவம் படிக்க விரும்பும் பெரும்பாலான மாணவர்கள் மருத்துவப் பட்டப்படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் படித்து முடித்த பிறகு இந்தியாவில் இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். அதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர் குழுக்கள் அரசை வலியுறுத்தின. கோரிக்கையை பரிசீலித்து, முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகு, கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம், என்றும் அமைச்சர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil