scorecardresearch

டான்ஜெட்கோ-வில் 10,260 காலியிடங்கள்; முதலில் 200 உதவியாளர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப அரசு அனுமதி

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10,260 காலிப்பணியிடங்களை நிரப்ப அரசிடம் கோரிக்கை; முதல் கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி

TANGEDCO
தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (டான்ஜெட்கோ) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்டவற்றில் உள்ள காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவன பணியிடங்களும் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: HVF Jobs; ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 214 பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

இந்தநிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் (TANGEDCO) முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக எரிசக்தித் துறைச் செயலர் ரமேஷ் சந்த் மீனா பிறப்பித்த உத்தரவில், ”கடந்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில், “நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள், நேரடி நியமனம் மூலம் 25-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 107-வது வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, மின்னியல் பிரிவில் 400 உதவிப் பொறியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவிப் பொறியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவிப் பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், கணக்குப் பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8,000 கள உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள 10,260 காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலாண் இயக்குநர் அரசிடம் அனுமதி கோரியுள்ளார்.

இதை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கவனமாக பரிசீலித்த அரசு, 10,260 காலிப்பணியிடங்களில் முதல் கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு ஆட்களை நியமிக்க 2 நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை டான்ஜெட்கோ அணுக வேண்டும். மேலும், மனிதவளக் கொள்கையை வெகு விரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்துக்கான நிதியத்தை ஏற்படுத்த வேண்டும். மனிதவளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tangedco 10260 vacancies tamilnadu govt allows to fill 200 posts through tnpsc in first stage

Best of Express