தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு செயல்முறை தொடங்கிய ஒரு வாரத்தில், ஆன்லைனில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை புதன்கிழமை 50,000 ஐத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் விண்ணப்பப் பதிவு, பணம் செலுத்துதல், கல்லூரிகள் தேர்வு செய்து நிரப்புதல், ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்தல் உள்ளிட்ட முழுமையான செயல்முறையும் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக உயர்கல்வித் துறையின் ஒரு பிரிவான தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (DOTE) அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்: TNEA Cut Off: பொறியியல் உத்தேச கட் ஆஃப்; கடந்த ஆண்டை விட 0.5 வித்தியாசம்?
இதனிடையே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 8,668 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். மே 9 ஆம் தேதி மாலை 6 மணி வரை மொத்தம் 51,386 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இதில் 6,345 மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தி தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர் என உயர்கல்வித் துறை கூடுதல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA-2023) பொறுப்பாளர் டாக்டர் டி புருஷோத்தமன் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டைப் போலவே, அனைத்து மேல்நிலைப் பள்ளிகளும் பொறியியல் படிப்பில் சேர மாணவர்களுக்கு உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், இணைய இணைப்பு இல்லாத மாணவர்களுக்காக, சென்னையில் மட்டும் 11 மையங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மாணவர் வசதி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அங்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை இலவசமாக பதிவு செய்யலாம், என்று DOTE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2.71 லட்சம் மாணவர்கள் பொறியியல் சேர்க்கைக்கு பதிவு செய்திருந்தனர். இந்த ஆண்டு மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5% கிடைமட்ட இடஒதுக்கீட்டைப் பெறுவதற்கான ஆன்லைன் செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், பல இட ஒதுக்கீடுகளைப் பெறுவதற்கான அனைத்து மென்பொருள் தொகுதிகளும் இந்த ஆண்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளன என்றும் DOTE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆன்லைனில் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 4 ஆம் தேதி. ஜூன் 5 ஆம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். ரேங்க் பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் முதல் கவுன்சிலிங் தொடங்கும். முதலில் சிறப்பு இட ஒதுக்கீடு மாணவர்கள் கவுன்சிலிங்கிற்கு அழைப்படுவர். பின்னர் பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு நான்கு சுற்று கவுன்சிலிங் நடைபெறும். முழு பொறியியல் சேர்க்கை செயல்முறை அக்டோபர் 3 ஆம் தேதி முடிவடையும் என்று DOTE அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil