கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது எலக்ட்ரானிக்ஸ்; வருங்காலத்திற்கு எது பெஸ்ட்?
தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் அல்லது இ.சி.இ, இ.இ.இ போன்ற அடிப்படை இன்ஜினியரிங் படிப்புகள்; எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது சிறந்தது? ஏன்? விளக்கம் இங்கே
பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் விருப்பமாக இருப்பது கணினி அறிவியல் என்ஜினியரிங் (Computer Science Engineering) தான். அதேநேரம் தற்போது கம்ப்யூட்டர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற பிரிவுகளுக்கும் அதிக மவுசு உள்ளது. இந்தநிலையில் எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்பு கிடைப்பது கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளா? அல்லது அடிப்படை இன்ஜினிரியங் பிரிவுகளா? என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
தற்போது ஐ.டி (IT) துறையில் நல்ல வேலைவாய்ப்பு மற்றும் எதிர்காலம் இருந்து வருவதால், மாணவர்கள் பொறியியல் சி.எஸ்.இ (CSE) மற்றும் ஐ.டி (IT) படிப்புகளை தேர்ந்தெடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள். மேலும், கம்ப்யூட்டர் சார்ந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), தரவு அறிவியல் (Data Science) போன்ற படிப்புகளையும் மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் தேர்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் அல்லது அடிப்படை இன்ஜினிரியங் பிரிவுகளில் எந்த படிப்பை தேர்வு செய்யலாம் என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால் தற்போது நிறைய மாணவர்கள் படித்து வருவதால், அனைவருக்கும் சிறந்த வேலைவாய்ப்பு கிடைப்பது சற்றுக் கடினம். அதேநேரம், மொத்த உலகமும் டிஜிட்டலை நோக்கி முன்னேறி வருவதால், டிஜிட்டல் சார்ந்த வேலைவாய்ப்பு எதிர்காலத்தில் அதிகரிக்கும். எனவே எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் எனும் இ.சி.இ மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எனும் இ.இ.இ பிரிவுகளுக்கு முன்னுரிமை அளிப்பது சிறந்தது. அதன்பிறகு கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யலாம்.
வருங்காலத்தில் எந்த பிரிவை தேர்வு செய்தாலும், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ், டேட்டா சயின்ஸ், ஆக்மெண்டட் ரியாலிட்டி போன்ற படிப்புகளை கூடுதலாக படித்துக் கொள்வது எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும். நீங்கள் எந்த இன்ஜினியரிங் பிரிவை படித்தாலும், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் படிப்பை கூடுதலாக படித்து, உங்கள் பிரிவில் எப்படி பயன்படுத்தலாம் என்று கற்றுக் கொள்ளுங்கள்.
எனவே பாடப்பிரிவை தேர்வு செய்யும் முன் அலசி ஆராயுங்கள். நல்ல கல்லூரியை தேர்வு செய்யுங்கள். எந்தக் காரணம் கொண்டும் நல்ல கல்லூரிகளை தவறவிட்டு விடாதீர்கள்.
அடிப்படை இன்ஜினிரியங் பிரிவுகளை தேர்வு செய்து படிக்கும்போது, முதல் வருடத்தில் இருந்தே கேட் தேர்வுக்கு தயாராகுங்கள். கூடுதலாக ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஐ.டி நிறுவனங்களில் பணி நீக்கம் பெரிய அளவில் நடந்து வருகிறது. நிறுவனங்களுக்கு புராஜெக்ட் கிடைப்பது கடினமாகி வருகிறது. அதேநேரம் கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகளை அதிகமானோர் படித்து வருகின்றனர். இதனால் 2027ல் வேலை கிடைப்பது கடினம். எனவே அதற்கேற்றாற்போல், உங்களுக்கு சரியானதை தேர்வு செய்யுங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.