தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் II-A தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மேலும் இரண்டு பேரை சிபி-சிஐடி காவல் பிரிவு கைது செய்தது. இந்த இருவரையும் சேர்த்து இதுவரை தமிழ்நாட்டில் 35 நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Advertisment
என்.வெங்கடேஸ்வரன் : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையைச் சேர்ந்த இவர் குரூப் II-ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சியடைந்திருக்கிறார் என்று கண்டறிந்த சிபிசிஐடி காவல் பிரிவு உடனடியாக அவரை கைது செய்தது. பட்டுகோட்டை வணிக வரித்துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறார் இந்த வெங்கடேஸ்வரன்.
உத்திரமேரூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் உதவியுடன் டிஎன்பிஎஸ்சி ஜெயக்குமாருக்கு 12 லட்சம் ரொக்க பணத்தை கொடுத்திருக்கிறார் என்.வெங்கடேஸ்வரன். இவர், குரூப் 2-ஏ தேர்வில் 265.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் 41 வது இடத்தைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.விமல்குமார் : திருச்சியில் உள்ள முசிரி நெடுஞ்சாலைத் துறையில் உதவியாளராக பணிபுரிந்த எம்.விமல்குமாரை (34) சிபிசிஐடி காவல் பிரிவு கைது செய்துள்ளது . ராதா என்கிற பெண் மூலம் ஜெயகுமாருக்கு 7 லட்சம் செலுத்தியதாகவும், 276 மதிப்பெண்களுடன் 22 வது இடத்தைப் பெற்றதாகவும் சிபி-சிஐடி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, குரூப் II-A மற்றும் குரூப் IV தேர்வு மோசடிகள் தொடர்பாக ஜெயக்குமார், சித்தாண்டி உட்பட 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2018 குரூப் II தேர்வில் முறைகேடு இல்லை - டிஎன்பிஎஸ்சி: குரூப் II, குரூப் IV தேர்வு முறைகேடுகளை தொடர்ந்து 2018ஆம் ஆண்டு நடந்த குரூப் II தேர்விலும் முறைகேடு நடந்திருக்கலாம் என்ற தகவலை டிஎன்பிஎஸ்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. குரூப் II தேர்வில் 1997-ம் ஆண்டு பிறந்த தேர்வர்கள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளது சந்தேகத்துக்குரியதாக உள்ளது என்று பல சமூக ஊடக தளங்கள் தெரிவித்து வந்தன. இந்த தேர்வில் தவறு நடந்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.