scorecardresearch

TNPSC தேர்வில் முறைகேடு? இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; பி.டி.ஆர் விளக்கம்

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் – இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்; முறைகேடு குறித்து விரிவான அறிக்கை அளிக்க டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது – அமைச்சர் பி.டி.ஆர்

tnpsc
குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் – இ.பி.எஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் தமிழக சட்ட சபையில் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவை கடந்த 24 ஆம் தேதி அறிவித்தது. இதில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் பலர் தேர்ச்சி அடைந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், ஒரே பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதும் சர்ச்சையானது. கூடுதலாக இதற்கு முன் வெளியான நில அளவையாளர் தேர்விலும் ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்றது தேர்வர்களிடையே சந்தேகத்தை எழுப்பியது. இந்த விவகாரங்கள் சர்ச்சையான நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதையும் படியுங்கள்: TNPSC Jobs: நில அளவையர் தேர்வு; காரைக்குடியில் மட்டும் 700 பேர் தேர்வானதாக சர்ச்சை; விசாரணை நடத்தப்படுமா?

அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “தென்காசியில் ஒரு தனியார் மையத்தில் பயிற்சி பெற்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம் தேர்வர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் உரிய விசாரணை ஏதேனும் தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஊழல் நடந்து இருப்பதாக எந்த ஆதாரமும் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் பேசி இருக்கிறார். எனவே அந்தச் சொற்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். ஆதாரம் இருந்தால் இந்த அவையிலே விளக்க வேண்டும்” என்று கூறினார்.

பின்னர், இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அப்போது பேசிய பி.டி.ஆர், “டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானதும் முறைகேடு புகார் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மனித வள மேலாண்மைத்துறை செயலாளரிடம் சொல்லி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு புகார் வந்ததும் செயலாளரிடம் விசாரிக்க அறிவுறுத்தினேன். டி.என்.பி.எஸ்.சி முறையில் சீர்திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தென்காசியில் மொத்தமே எட்டு மையங்கள் தான் உள்ளது. அதில் முதல் 500 பேரில் 27 பேர், முதல் 1000 பேரில் 45 பேர், முதல் பத்தாயிரம் பேரில் 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர், எத்தனை மையங்களை நடத்துகிறார் எங்கு எங்கு நடத்துகிறார் என்பது குறித்து உரிய தகவல் என்னிடம் இல்லை.

குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசையில் மாற்றம் உள்ளதாக கூறப்படுகிறது. இளநிலை உதவியாளர் பதவிக்கு சிறப்பு தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஆனால் தட்டச்சர் பதவிக்கு ஆங்கிலம் மற்றும் தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் உள்ளிட்ட சிறப்பு தகுதிகள் தேவை அதனால் ரேங்குகளில் மாற்றம் ஏற்படுவது இயல்புதான். குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை மாவட்ட வாரியாகக் கேட்டுள்ளோம்.

இதே போல் தான் சர்வேயர் தேர்வுகளிலும் காரைக்குடி மையத்தில் முதல் 500 பேரில் 200 பேர் முதல் 1000 பேரில் 377 பேர் முதல் 2000 பேரில் 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது குறித்து தேர்வு மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. முன்னதாக இது போன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. முறைகேடு குறித்து விரிவான அறிக்கை அளிக்க டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று விளக்கம் அளித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tnpsc exams scam ptr explains eps resolution at assembly

Best of Express