TNPSC Group 4 malpractice 12 men involved : தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வுகளை நடத்தியது. அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது. இதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை அந்த பட்டியலில் இருந்து நீக்கியதோடு மட்டுமின்றி தேர்வு எழுத வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டது.
சிக்கிக் கொண்ட இடைத்தரகர்கள்
இந்த முறைக்கேட்டில் இடைத்தரகர்களாக பணியாற்றிய சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்திருக்கும் பள்ளி கல்வி இயக்குநரக அலுவலக உதவியாளர் ரமேஷ்(39), எரிசக்தி துறையில் உதவியாளராக பணியாற்றும் திருக்குமரன் (35) மற்றும் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார்(21) ஆகிய 3 பேரை கைது செய்தது காவல்துறை. டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் மற்றும் சார்பு செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மூவரிடம் விசாரணை நடத்திய போதுசென்னை ஆவடியில் இருக்கும் வெங்கட்ராமன் என்பவர் குறித்த தகவல்கள் வெளியானது. 38 வயதான வெங்கட்ராமன் தேர்வர்களிடம் 10 லட்சம் வரை வாங்கிக் கொண்டு அவர்களை தேர்ச்சி அடைய வைக்க முயன்றது தெரிய வந்தது. அவரும் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சி.ஏ.ஏவை திரும்பிப் பெற முடியாது - அமித்ஷாவின் வீடியோ
எப்படி அரங்கேறியது இந்த முறைகேடு?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் ஆகிய தேர்வு மையங்களில் எழுதப்பட்ட தேர்வர்கள் எழுதிய தேர்வுத்தாள்களை மட்டும் இரவு உணவு வேளையின் போது வேனில் இருந்து எடுத்து அந்த 99 நபர்களின் விடைத்தாள்களில் திருத்தம் மேற்கொண்டுள்ளனர். அதிகாலை 5 மணிக்கு காலை தேநீர் இடைவேளையின் போது மீண்டும் அந்த வேனில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன்(45) என்பவரை காவல்துறையினர் விசாரிக்கும் போது இந்த அதிர்ச்சி தக்வல்கள் வெளியானது. அவருடைய வீட்டில் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஓம் காந்தனுடன் சேர்த்து இடைத்தரகர் பால சுந்தர்ராஜூம் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது இவ்விருவரும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா கோடனூரைச் சேர்ந்த மா.திருவேல்முருகன், கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி தாலுகாவில் அமைந்திருக்கும் சிறுகிராமத்தைச் சேர்ந்த ஆர்.ராஜசேகர், ஆவடியில் அமைந்திருக்கும் கவுரிப்பேட்டையைச் சேர்ந்த மு.காலேஷா ஆகிய 3 பேர் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெற முயற்சி செய்தது தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தில் வசித்து வரும் கார்த்தி, சென்னை ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தில் வசித்து வரும் வினோத் குமார், கடலூர், பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தில் வசித்து வரும் சீனுவாசன்(33) ஆகிய 3 பேர் முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர். அவர்களும் நேற்று (27/01/2020) கைது செய்யபட்டுள்ளனர். இதுவரை இந்த வழக்கில் 12 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம்மூவரும் ஆளுக்கு ரூ.10 லட்சம் என இடைத்தரகர்களுக்கு ரூ.30 லட்சம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் சீனுவாசன் இடைதரகராகவும் செயல்பட்டு இருக்கிறார் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர் 4 பேர்களிடம் தலா ரூ.5 லட்சம் வாங்கி, அவர்கள் முறை கேடாக தேர்வு எழுத உதவி செய்து உள்ளார்.
மேலும் படிக்க : குரூப் 4 முறைக்கேடு : சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற சதி!
இன்னும் கையில் அகப்படாத முக்கிய குற்றவாளி
சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் இந்த வழக்கில் மிக முக்கியமான குற்றவாளியாக கருதப்படுகிறார். காவல்துறை இவரை வலைவீசி தேடிவரும் நிலையில் இவர் தலைமறைவாகியுள்ளார். அவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவரது மனைவியிடம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். குரூப் 4 மட்டுமின்றி இதற்கு முன்பு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுகளிலும் இவர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கருவூலத்தில் இருந்து வேனில் வைத்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட விடைத்தாள்களை வழியில் பெற்றுக் கொண்டு திருத்தங்களை மேற்கொண்டது இவர் தான். தேர்வர்களுக்கு, தேர்வுக்கு முதல்நாள் அன்று மேஜிக் பேனாக்களை கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்ததும் இவர் தான். இந்த வழக்கில் மேலும் சம்பந்தபட்டுள்ள முக்கிய நபர்கள் யார், அலுவலர்கள் யாரேனும் உடந்தையாக இருக்கின்றார்களா என்பது தொடர்பாக மேலும் விசாராணை நடத்தப்பட்டு வருகிறது.
பணியிடை நீக்கம்
டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வி இயக்குநரக அலுவலக உதவியாளர் ரமேஷ், எரிசக்தி துறை உதவியாளர் திருக்குமரன் ஆகிய 3 பேருடைய அரசு வேலை பறிபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. திருக்குமரன் 2017-ம் ஆணடு நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று எரிசக்தி துறையில் தற்போது பணியாற்றி வருகிறார். இவர் குரூப்-2ஏ தேர்வில் 267 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் 37-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வினை எழுதுவதற்காக மாமல்லபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் வரை சென்றுள்ளார் திருக்குமரன்.
மேலும் அந்த தேர்விலும் முதல் நூறு இடங்களில் 37 இடங்களை ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களே பிடித்துள்ளனர் என்பது மேலும் அதிர்ச்சி அளித்துள்ளது. குரூப் 4-ல் எப்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனரோ அதே போன்று குரூப் 2ஏ முறைக்கேட்டினையும் விரைவில் டி.என்.பி.எஸ்.சி வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்துகளை கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.