டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, எனவே மார்ச் மாத இறுதிக்குள் தேர்வு முடிவுகள் நிச்சயம் வெளியிடப்படும் என தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: TNPSC Group 4 Results: குரூப் 4- வி.ஏ.ஓ ரிசல்ட் ரிலீஸ் இன்னும் ஏன் லேட்? திடீர் ட்ரெண்டிங்கில் இறங்கிய தேர்வர்கள்
இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு காரணமாக முடிவுகள் வெளியாகுவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் தீர்ப்புக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு குரூப் 2 ரிசல்ட் வெளியிடப்பட்டது. அப்போது டிசம்பர் மாதத்தில் குரூப் 4 தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு மாதமாக தேர்வு முடிவு குறித்த அறிவிப்பு நீட்டிக்கப்பட்டது. கடைசியாக மார்ச் மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை வெளியிடப்படவில்லை.
இதனையடுத்து, சமூக ஊடகங்களில் குரூப் 4 தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ட்விட்டர் தளத்தில் #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதுதொடர்பான மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், தேர்வாணையம் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி, தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று மீண்டும் தேர்வர்களின் கனிவான தகவலுக்காகத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil