டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் II-ஏ முறைகேடு தொடர்பாக நாளும் ஒரு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஏழு நாள் சிபிசிஐடி காவலில் இருக்கும் ஜெயக்குமார் நேற்று திடிக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார். 23 அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்ததாகவும், பெற்ற பெற்ற பணத்தை முறைகேடுகளுக்கு உதவி செய்த அனைத்து பங்கீட்டாளர்களுக்கும் பகிர்ந்து கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Advertisment
முழு விசாரணை:
2019 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்வு, 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்வில் ஒரு குறிப்பிட்ட மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர் என்று சந்தேகம் எழுந்தது. இந்த சந்தேகத்தை விசாரித்த டிஎன்பிஎஸ்சி தமிழ்நாடு சிபிசிஐடி காவல்பிரிவினரிடம் வழக்கு பதிவு செய்தது.டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 35 நபர்களை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் முகப்பேரை சேர்ந்த ஜெயக்குமார். தலைமறைவாக இருந்த இவர் கடந்த 6ம் தேதி சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
முதலில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டுக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஜெயக்குமார் சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஜெயக்குமார் மனுவை வன்மையாக எதிர்த்தது சிபிசிஐடி காவல் பிரிவு.
இதையடுத்து, நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்போது நடந்துவரும் கிடுக்குப்பிடி விசாரணையில் 23 அரசுப் பணிகளை ரூ.4 கோடிக்கு விற்பனை செய்ததாக ஜெயக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார் என்று சிபிசிஐடி வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.