தமிழ்நாடு பி.எட். ரிசல்ட் குளறுபடி: ஒரு லட்சம் மாணவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது கல்வித் துறை?

தேர்வு எழுதியும், எழுதவில்லை என முடிவு வந்திருக்கும் மாணவ ஆசிரியர்களுக்கு யார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதெல்லாம் கேள்விக்குறிதானா?

கமல.செல்வராஜ்

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி என சுமார் 750 பி.எட். கல்லூரிகளை உள்ளடக்கி சென்னையில் இயங்கி வருவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக் கழகம். இந்தியாவிலையே பி.எட். கல்லூரிகளுக்கென்று தொடங்கப்பட்ட முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமைக்குரியது.

ஆண்டு தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ ஆசிரியர்கள் இப்பல்கலைக் கழகத்தில் பி.எட். கல்விப் பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு படித்த சுமார் ஒரு லட்சத்தி 16 ஆயிரம் மாணவ ஆசிரியர்களுக்கு, கடந்த மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் இறுதிவரைப் பல்கலைக் கழகத் தேர்வுகள் நடந்தன. அந்தத் தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களுக்குப் பிறகு நேற்று முன்தினம் செப்.24 ஆம் தேதி இரவு இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.


அந்த முடிவைப் பார்த்த பி.எட். மாணவ ஆசிரியர்களும் அவர்களைப் பயிற்றுவிக்கும் பேராசிரியர்களும், பெற்றோர்களும் மீள முடியாத அதிர்ச்சிக்குள்ளாயினர். ஏனென்றால் தேர்வு எழுதி விட்டு பல்கலைக் கழக ரேங்க் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கையோடு ‘இலவு காத்த கிளி போல்’ மூன்று மாதங்களாகக் காத்திருந்த பலருக்கு கிடைத்தப் பரிசு என்ன தெரியுமா? அவர்கள் தேர்வே எழுதவில்லை, தேர்வுக்கு ஆப்சென்ட் ஆயிருக்கிறார்கள் என்பதுதான். அதனைப் பார்த்ததும் மாணவ ஆசிரியர்களும் அவர்களின் பெற்றோரும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உட்பட்டுள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க, இன்னொருப் பக்கம் தேர்வு எழுதுவதற்கு இம்முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமலும் கல்லூரிக்குப் போகாமலும் இருந்து, கல்லூரிப் பேராசிரியர்களால் இன்டேனல் மார்க்கூட அனுப்பாத மாணவ ஆசிரியர்களுக்கு, இன்டேனல் மார்க்குடன் ரிசல்ட் வெளியாகியுள்ளது. அதனைப் பார்த்த கல்லூரி முதல்வர்களும் பேராசிரியர்களும், ‘அப்பப்பா… இது என்னடா முட்டாள் தனம்’ என மூக்கின் மேல் விரல் வைத்து புலம்பித் திரிகின்றனர். பல மாணவ ஆசிரியர்களுக்குத் தேர்வு எழுதியும், அனைத்துப் பாடங்களும் ஆப்சென்ட் என வந்துள்ளன. அதோடு சில கல்லூரிகளில் தேர்வு எழுதிய மாணவ ஆசிரியர்களுக்கு சில பாடங்களுக்குத் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன பிறப்பாடங்களுக்கு ஆப்சென்று என வந்துள்ளது.

மேலும் ஏராளமான மணவ ஆசிரியர்களுக்கு சிங்கிள் டிஜிட் (ஒற்றை இலக்கு மதிப்பெண்) மார்க்குடன் ரிசல்ட் வந்துள்ளது. இப்படி குளறுபடி மேல் குளறுபடியாக வெளியாயிருக்கும் தேர்வு முடிவினால் பாதிக்கப்பட்ட பயிற்சியாசிரியர்களும் பெற்றோரும் மனக்குழப்பத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளனர்.

எவ்வித தவறோ அல்லது குளறுபடிகளோ இல்லாமல் மிகவும் கண்ணும் கருத்துமாக வெளியிட வேண்டிய தேர்வு முடிவை இவ்வளவு அலட்சியமாக வெளியிட்டிருக்கும் பல்கலைக் கழகத்தின் மேதாவிகள் மீது யார் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?

3 முக்கியப் பதவிகள் காலியிடம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தேர்வு குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?

தேர்வு எழுதியும், எழுதவில்லை என முடிவு வந்திருக்கும் மாணவ ஆசிரியர்களுக்கு யார் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதெல்லாம் கேள்விக்குறிதானா? இல்லை இதற்கெல்லாம் தகுந்த விடையும் நடவடிக்கையும் உண்டா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கவிதை- கட்டுரை- பட்டிமன்றம் என அழுத்தமாக தடம் பதித்து வருபவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close