Advertisment

3 முக்கியப் பதவிகள் காலியிடம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தேர்வு குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு?

Tamil Nadu Teachers Education University: உடனடியாக புதிய ரிசல்ட் வெளியிடுவது பல்கலைக்கழகத்திற்கும், கல்வித்துறைக்கும் கௌரவத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tnteu.ac.in results 2019, tnteu results 2019, tnteu result, பி.எட். ரிசல்ட், பி.எட். கல்லூரி, தமிழ்நாடு

tnteu.ac.in results 2019, tnteu results 2019, tnteu result, பி.எட். ரிசல்ட், பி.எட். கல்லூரி, தமிழ்நாடு

முனைவர் கமல.செல்வராஜ்

Advertisment

TNTEU B.Ed Result 2019: தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் சுயநிதி ஆகிய அனைத்து பி.எட். கல்லூரிகளையும் ஒருங்கிணைத்து 2008 ஆம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம். இது இந்தியாவில் பி.எட். கல்லூரிகளுக்கு மட்டுமான முதல் பல்கலைக் கழகம் என்னும் பெருமைக்குரியது.

தமிழகம் முழுவதும் சுமார் 750 பி.எட். கல்லூரிகள் இதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்த முனைவர் தங்கசாமி ஓய்வு பெற்று சுமார் பத்து மாதங்கள் கடந்து விட்டன. அதன் பிறகு அந்தப் பதவிக்கு இதுவரை வேறு எவரும் நியமிக்கப்படவில்லை.

மேலும் இப்பல்லைக்கழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பதிவாளர் பதவியும் காலியாகவே உள்ளது. அந்தப் பொறுப்பை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக (Controler of Examinations) இருந்த முனைவர் இரவீந்திரநாத் தாகூர் கூடுதல் பொறுப்பாகக் கவனித்து வந்தார். அவரும் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு பணிநிறைவுப் பெற்றார். அதன் பிறகு இதுவரை அந்தப் பணிக்கும் எவரையும் நிரந்தரமாக நியமிக்கவில்லை. அதற்குப் பதிலாக அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இரண்டு பேராசிரியர்களிடம் அவ்விரு பதவிக்கானப் பொறுப்பையும் ஒப்படைத்துள்ளனர்.

ஒட்டுமொத்தத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் முதுகெலும்பாகச் செயல்பட வேண்டிய துணைவேந்தர், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் இல்லாமல் ‘கேப்டன் இல்லாத கப்பலாக’ இப்பல்கலைக் கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

TNTEU B.Ed Result 2019 Faults: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் குளறுபடி

இந்நிலையில், கடந்த 2018 – 19 ஆம் கல்வியாண்டிற்கானத் தேர்வு முடிவுகள் இப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. அதனால் தமிழகம் முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான பி.எட். மாணவர்கள் மிகுந்த மன உளச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதாத மாணவர்களுக்குத் தேர்வு எழுதியதாக அனைத்துப் பாடத்திற்கும் மதிப்பெண்ணுடன் ரிசல்ட் வெளியாகியிருக்கிறது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு எழுதவில்லை ஆப்சென்ட் என ரிசல்ட் வந்துள்ளது. பல்கலைக்கழக அளவில் ரேங் கிடைக்கும் அளவிற்கு மார்க் கிடைக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு ஒற்றை இலக்க மார்க் மட்டுமே கிடைத்து தோல்வியடைந்ததாக ரிசல்ட் வெளியாகியுள்ளது.

இப்படி ஒன்றல்ல… இரண்டல்ல… எத்தனை எத்தனையோ குளறுபடிகள் அந்த தேர்வு முடிவில் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் மத்தியிலும், சமுதாயத்தின் முன்பும் பல விதமான அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தக் குளறுபடிகள் மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால், அதிலிருந்து தப்பிக்கும் விதமாக பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளராக இருக்கும் பாலகிருஷ்ணன் ‘விடைத்தாள் தொடர்பான, பார்கோட்டை ஸ்கேன் செய்வதில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறால், இந்தப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. விரைவில் சரிசெய்யப்பட்டு, புதியப் பட்டியல் வெளியிடப்படும்’ எனத்தெரிவித்திருந்தார்.

அதனை நம்பிய மாணவர்கள், புதிய ரிசல்ட் வரும் போது தங்களின் குழப்பத்திற்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு, ஓரளவிற்கு மன அமைதியடைந்திருந்தனர். ஆனால் அந்த அமைதி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அதற்குள் “பாம்பு கொத்தியவன் தலையில் இடிவிழுந்த கதை” என ஊருக்குள் ஒரு பழமொழிக் கூறுவார்கள். அதற்கிணங்க, புதிய ரிசல்ட் இன்று வரும்… நாளை வரும்… என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு பல்கலைக் கழகம் இப்படியொரு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

பல்கலைக்கழகம் வெளியிட்டத் தேர்வு முடிவில் யாராவது தேர்ச்சிப் பெறாமல் இருந்தால் அவர்கள் ரூ.750 செலுத்தி விடைத்தாள் மறுதிருத்துதலுக்கு (Revaluation) விண்ணப்பிக்கலாம். யாருக்காவது விடைதாளின் நகல் பெறவேண்டும் அல்லது மறுகூட்டல் செய்ய வேண்டும் என்றால் தலா ரூ. 300 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அறிந்த மாணவர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

ஒட்டுமொத்தத் தவறையும் பல்கலைக்கழகம் செய்து விட்டு அந்தத் தவறுகளுக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்தாமல், இப்படி மாணவர்கள் மீது அநியாயமாகப் பணச்சுமையும் ஏற்படுத்தியுள்ளது எந்த வகையில் நியாயம்? என தேர்வு எழுதிவிட்டு நல்ல மார்க்குடன் கூடிய ரிசல்ட்டிற்காகக் காத்திருந்து, தேர்வே எழுதவில்லை என ரிசல்ட் வந்த ஒரு ஏழை மாணவியின் தந்தை, தனது கண்கள் கலங்க கேட்கிறார். இதற்கு இந்தப் பல்கலைக் கழகத்தின் பொறுப்பு மிக்க பொறுப்பாளியாக(!) இருக்கும் பதிவாளர் என்னப் பதில் சொல்லப் போகிறார்?

மட்டுமின்றி பல்கலைக்கழகம் இத்தனை தவறுகளையும் செய்திருப்பதை அறிந்தும், தமிழக அரசும், கல்வித்துறையும் இதற்கு எந்தப் பதிலும் கூறாமல் வாய்மூடி மௌனம் சாதிப்பதின் இரகசியம் என்ன? தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஓயாமல் ஓடோடிச் சென்று ஆய்வு நடத்தும் தமிழக ஆளுநர், ஏன் தான் வேந்தராக இருந்து, தனது நேரடி கட்டுப்பாட்டிற்குள்ளிருக்கும், இப்பல்கலைக்கழகத்தில் இவ்வளவு பெரியத் தவறு நடந்து பல்லாயிரம் மாணவர்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாயிருந்தும் அதைப் பற்றி கேட்காமல் இருக்க வேண்டும்?

தமிழ்நாடு பி.எட். ரிசல்ட் குளறுபடி: ஒரு லட்சம் மாணவர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது கல்வித் துறை?

இந்த வினாக்களுக்கெல்லாம் விடை கூறும் விதமாக பாதிக்கப் பட்டிருக்கும் மாணவர்களிடம் மீண்டும் பணம் செலுத்தி மறுதிருத்தல், மறுகூட்டல், விடைதாள் நகல் பெறுதல் என ‘வெந்த புண்ணில் மீண்டும் வேல் பாய்ச்சி பணம் பறிப்பதை’ உடனடியாக நிறுத்தி விட்டு, பொறுப்பு பதிவாளர் முன்பு கூறியது போல், ரிசல்ட்டில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை நிவர்த்திச் செய்து, உடனடியாக புதிய ரிசல்ட் வெளியிடுவது பல்கலைக்கழகத்திற்கும், கல்வித்துறைக்கும் கௌரவத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)

 

Exam Result Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment