Advertisment

டைம்ஸ் உலக பல்கலை. தரவரிசை; ஐ.ஐ.டி.,க்களின் புறக்கணிப்பை திரும்ப பெற அளவுருக்களில் மாற்றம்

ஐ.ஐ.டி.,கள் முன்பு விமர்சித்த மேற்கோள் அளவீட்டில் மாற்றங்கள் உட்பட தரவரிசை அளவுகோல்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை டைம்ஸ் உயர் கல்வி ஏஜென்சி ஐ.ஐ.டி.,க்களுக்கு விளக்கியுள்ளது

author-image
WebDesk
New Update
iit delhi

ஐ.ஐ.டி டெல்லி

Vidheesha Kuntamalla

Advertisment

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி - IIT) டைம்ஸ் உயர் கல்வி (THE) உலகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலை “வெளிப்படைத்தன்மை” பிரச்சினைகளால் புறக்கணித்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை ஏஜென்சி, ஐ.ஐ.டி.,க்களை மீண்டும் தரவரிசைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில், இந்த ஆண்டு செயல்திறன் அளவுருக்களில் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட மாற்றங்களை தெரிவிக்க, கடந்த மாதம் இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களை அணுகியது, இது அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் என்று டைம்ஸ் உயர் கல்வி தரவரிசை ஏஜென்சி நம்புகிறது.

ஆதாரங்களின்படி, டைம்ஸ் உயர் கல்வியின் பிரதிநிதிகள் சமீபத்தில் ஐ.ஐ.டி-டெல்லி, ஐ.ஐ.டி-பாம்பே மற்றும் ஐ.ஐ.டி-மெட்ராஸ் ஆகியவற்றுக்கு மார்ச் 7 அன்று விளக்கக்காட்சியை அளித்தனர், மேலும் ஐ.ஐ.டி.,கள் முன்பு விமர்சித்த மேற்கோள் அளவீட்டில் மாற்றங்கள் உட்பட தரவரிசை அளவுகோல்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை பட்டியலிட்டனர்.

இதையும் படியுங்கள்: ஐ.ஐ.டி மெட்ராஸ் வழங்கும் ‘அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்’ கணித படிப்பு; இலவசமாக படிக்கலாம்!

இங்கிலாந்தை தளமாகக் கொண்ட டைம்ஸ் உயர் கல்வி இதழால் ஆண்டுதோறும் தரவரிசை வெளியிடப்படுகிறது.

ஒரு பல்கலைக்கழகத்தின் வெளியிடப்பட்ட படைப்புகள் உலகளவில் அறிஞர்களால் மேற்கோள் காட்டப்பட்ட சராசரி எண்ணிக்கையை அளவிடும் மேற்கோள் அளவீடு, முன்னதாக 30% மதிப்பீட்டைக் கொண்டிருந்தது. தற்போது அது 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துக் கொண்டுள்ளது.

மேற்கோள் அளவீடு குறித்து ஐ.ஐ.டி.,கள் கவலை தெரிவித்ததற்கு ஒரு காரணம் கூட்டு ஆராய்ச்சி திட்டங்களின் பிரச்சினை. மேற்கோள் அளவீட்டில் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க, தரவரிசையில் பங்கேற்கும் நிறுவனங்கள் கூட்டு ஆராய்ச்சித் திட்டங்களைப் பயன்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இது போன்ற ஆய்வுக் கட்டுரைகள் பல ஆசிரியர்களுடன் தொடர்புடையவர்களால் அதிக மேற்கோள்களைக் கொண்டுள்ளன, எனவே அத்தகைய திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு நிறுவனம் மற்றவர்களுக்கு சமமற்ற நன்மையைக் கொண்டுள்ளது, ஏனெனில் ஒரு கட்டுரை உலகளவில் பல முறை மேற்கோள் காட்டப்படுகிறது. இது நிறுவனத்தின் ஆராய்ச்சி வெளியீடு மற்றும் தாக்கத்தின் நியாயமற்ற பிரதிநிதித்துவத்திற்கு வழிவகுக்கும் மற்றும் அதன் உண்மையான செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்காது என்று ஐ.ஐ.டி.,கள் டைம்ஸ் உயர் கல்வியிடம் தெரிவித்துள்ளன.

மும்பை, டெல்லி, பம்பாய், மெட்ராஸ், கான்பூர், ரூர்க்கி மற்றும் காரக்பூரில் உள்ள ஏழு பழைய ஐ.ஐ.டி.,கள், 2020 ஆம் ஆண்டில் டைம்ஸ் உயர்கல்வி தரவரிசையை முதலில் புறக்கணித்தன, அவற்றில் எதுவுமே கடந்த ஆண்டு உலகின் சிறந்த 300 பல்கலைக்கழகங்களில் இடம் பெறாததால் வெளிப்படைத்தன்மை குறித்த கவலைகளை மேற்கோள் காட்டியது. 2019 ஆம் ஆண்டில், ஒப்பீட்டளவில் புதிய ஐ.ஐ.டி வியக்கத்தக்க வகையில் தரவரிசையில் அதன் பழைய மற்றும் நிறுவப்பட்ட சக ஐ.ஐ.டி.,க்களை முறியடித்தது, சர்வதேச கூட்டு ஆராய்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் மேற்கோள் அளவீட்டில் அதிக மதிப்பெண்களைப் பெற்றது.

"செல்வாக்கு மிக்க" மேற்கோள் அளவீட்டின் வெயிட்டேஜை பாதியாகக் குறைப்பதைத் தவிர, டைம்ஸ் உயர் கல்வியானது மூன்று புதிய குறிகாட்டிகளைச் சேர்த்துள்ளது, அவை கூட்டாக 15% ஆகும்: வழக்கமான ஆராய்ச்சி வலிமை (5%), ஆராய்ச்சியில் சிறந்தது (5%) மற்றும் மேற்கோள்களின் நெட்வொர்க் விளைவு (5%). இந்த அளவுருக்கள் மேற்கோள் அளவீட்டின் குறைப்பைக் கூட்டாகச் செய்கின்றன.

'வழக்கமான ஆராய்ச்சி வலிமை' என்பது ஒரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றவற்றுடன் ஒப்பிடும்போது எவ்வளவு வலிமையானது என்பதை அளவிடும் அதே வேளையில், 'ஆராய்ச்சியில் சிறந்தது' என்பது ஒரு பல்கலைக்கழகத்தில் சிறந்த ஆராய்ச்சிப் பகுதிகள் உள்ளதா என்பதைப் பார்க்கும் அளவீடு ஆகும். இறுதியாக, 'மேற்கோள்களின் நெட்வொர்க் விளைவு' ஒரு வெளியீட்டை மேற்கோள் காட்டும் ஆராய்ச்சியாளர்களின் முக்கியத்துவத்தைப் பார்க்கிறது. குறைவான முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வாளரின் மேற்கோளைக் காட்டிலும் மிக முக்கியமான ஆராய்ச்சியாளரின் மேற்கோள் அதிக வெயிட்டேஜைக் கொண்டுள்ளது என்று அது கருதுகிறது.

மேலே உள்ள மாற்றங்கள், கடந்த மாதம் ஐ.ஐ.டி.,களுக்கு டைம்ஸ் உயர் கல்வி அளித்த விளக்கத்தில், "சிறிய, ஒப்பீட்டளவில் அறியப்படாத இந்திய நிறுவனங்களுக்கான உயர் தரநிலை பதவிகள், சில நிறுவனங்களுக்கு ஓராண்டிலிருந்து அடுத்த ஆண்டு வரை அதிக ஏற்ற இறக்கத்துடன், ஐ.ஐ.டி.,களின் கவலையை நிவர்த்தி செய்யும்," என்று வாதிட்டது.

தரவரிசைகள் எவ்வாறு அட்டவணைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்த கூடுதல் தகவலுக்கான ஐ.ஐ.டி.,களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, எந்தவொரு நிறுவனத்திற்கும் அணுகக்கூடிய பொது தளத்துடன் 2019 மற்றும் 2021 க்கு இடையில் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் அதன் தரவரிசை கணக்கீடுகளை தணிக்கை செய்ததாக டைம்ஸ் உயர் கல்வி, ஐ.ஐ.டி நிறுவனங்களுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தரவரிசைக் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள் குறியீடுகள் மற்றும் தரவுத் தொகுப்புகளுக்கான முழு அணுகலை டைம்ஸ் உயர் கல்வி வழங்கவில்லை.

கூட்டத்தில் கலந்து கொண்ட மூன்று ஐ.ஐ.டி.,களின் இயக்குநர்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. ஐ.ஐ.டி-பாம்பே இயக்குநர் சுபாசிஸ் சவுதாரி மற்றும் ஐ.ஐ.டி-டெல்லி ரங்கன் பானர்ஜி ஆகியோர் தரவரிசையில் மீண்டும் பங்கேற்பதா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், ஏழு பழைய ஐ.ஐ.டி.,களின் தலைவர்கள் 2020 இல் ஒன்றாக புறக்கணிப்பைச் செய்ததால் தற்போது கூட்டாக முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினர். கருத்துக்கான கோரிக்கைகளுக்கு ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி பதிலளிக்கவில்லை.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய டைம்ஸ் உயர்கல்வியின் தலைமை உலக விவகார அதிகாரி பில் பாட்டி, “இந்த ஏழு ஐ.ஐ.டி.,களும் டைம்ஸ் உயர்கல்வியின் தங்கத் தரமான உலகத் தரவரிசையில் பங்கேற்க விரும்பாத மிக அரிதான மற்றும் சிறிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பல்கலைக்கழகங்களை ஆதரிப்பதற்காக நாங்கள் கூட்டு மற்றும் தன்னார்வ செயல்முறையை செயல்படுத்துவதால், உலகளாவிய தரவரிசையில் இருந்து தங்களை ஒதுக்கி வைப்பதற்கான அவர்களின் முடிவை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம்.”

"இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசையின் 2024 பதிப்பிற்கான தரவு சேகரிப்பு இப்போது சிறப்பாக நடந்து வருகிறது, மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, உலகளாவிய உயர்கல்வி சமூகத்துடன் திறந்த ஆலோசனைக்கு பிறகு, எங்கள் குறிகாட்டிகள் மற்றும் வெயிட்டேஜ்களில் பல மாற்றங்களைச் செய்து, திருத்தப்பட்ட முறையை நாங்கள் செயல்படுத்தினோம். குறிப்பாக ஐ.ஐ.டி.க்களுக்காகக் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தில் எங்களது முறைசார் மாற்றங்களை நேரடியாகப் பகிர்ந்து கொண்டோம் என்பதை உறுதிப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன், மேலும் வெளிப்படைத்தன்மையை ஆதரிப்பதற்கும் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கும் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய அமைப்புகளுடன் கூட்டங்களை நடத்தியுள்ளோம்,” என்றும் பில் பாட்டி கூறினார்

மேலும், ஏழு ஐ.ஐ.டி.,கள் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதிலளிக்க டைம்ஸ் உயர் கல்வி திறந்திருக்கும் என்றும், அவர்கள் அனைவரையும் மீண்டும் செயல்முறைக்கு வரவேற்கவும், அவற்றின் தரவு சமர்ப்பிப்பை ஆதரிக்கவும் ஆர்வமாக இருப்பதாகவும் பில் பாட்டி கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Iit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment