2023-24ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். அப்போது, விவசாயத் துறை மற்றும் கல்விக்கு அரசு உயர் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
Advertisment
நாட்டின் கல்வித் துறை சார்ந்து பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் உருவாக்கப்படும். 2014 முதல் அமைக்கபட்ட157 மருத்துவக் கல்லூரிகளுடன் சேர்த்து இவை முக்கிய இடங்களில் அமைக்கப்படும். மருத்துவத் துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க புதிய திட்டம் உருவாக்கப்படும். ஐசிஎம்ஆர் ஆய்வகங்களை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
தரமான புத்தகங்களுடன் தேசிய டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கானதாக இது இருக்கும். அவர்களுக்கு ஏற்ற தரமான புத்தகங்கள் இதில் வழங்கப்படும்.
பஞ்சாயத்து அளவில் நூலகங்களை அமைக்க மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். அரசுசாரா நிறுவனங்களின் கூட்டுடன் இத்தகைய நூலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு அளிக்கும் நோக்கில் பிரதமரின் கவுஷல் விகாஸ் 4.O திட்டம் கொண்டுவரப்படும். இதில், ட்ரோன்கள், 3டி பிரிண்ட்டிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படும்.
நாடு முழுவதும் 30 ஸ்கில் இந்தியா இன்டர்நேஷ்னல் மையங்கள் உருவாக்கப்படும். அனைத்து திறன் மேம்பாட்டு மையங்களிலும் ஒரே மாதிரியான பயிற்சிகள் வழங்கப்படும்.
ஆசிரியர் பயிற்சித் திட்டம் புத்தாக்க முறையில் மேம்படுத்தப்படும். ஐசிடி முறை அமல்படுத்தப்படும்.
பழங்குடியின பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 38,800 புதிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மத்திய அரசு சார்பில் நியமனம் செய்யப்படுவர். இதன் மூலம் 740 ஏகலைவா பள்ளிகளில் படிக்கும் 3.5 லட்சம் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழங்கப்படும்.
எழுத்தறிவு சார்ந்து இயங்கும் தனியார் என்ஜிஓக்களுடன் இணைந்து பாரம்பரிய நூலகங்கள் மேம்படுத்தப்படும். நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் எழுத்தறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும் எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“